காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் தொடர்வதோடு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினர் மற்றும் குடியேறிகளின் தாக்குதகளில் பதின்ம வயதினர் உட்பட இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்த உடன்படிக்கையின்படி மேலும் மூன்று பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் கையளித்திருக்கும் நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டிருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோன்று பானி சுஹைலா சிறு நகரில் ஒன்றுகூடல் ஒன்றில் ஈடுபட்டிருந்த பலஸ்தீன சிவிலியன்கள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் பலரும் காயமடைந்துள்ளனர்.
இதேநேரம் கான் யூனிஸின் கிழக்கே அபசான் அல் கபிர் நகரில் உள்ள அல் கான்சா பாடசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் செல் குண்டு தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு இஸ்ரேலிய கடற்படை மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமின் கடற்கரை பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி இருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 அம்ச திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி காசாவில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறு போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 236 பேர் கொல்ப்பட்டுள்ளனர்.
காசாவில் கான் யூனிஸ் மற்றும் காசா நகரிலே இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கணிசமான கட்டடங்கள் மற்றும் குடியிருப்புக் கட்டடங்களை தகர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேல் 194 தடவைகள் போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டிருப்பதாக காசா அரச ஊடக அலுவலக பணிப்பாளர் இஸ்மைல் அல் தவாபித் குறிப்பிட்டுள்ளார். இதில் இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிச் சூடு, செல் குண்டு தாக்குதல்கள், ஊடுருவல்கள் தவிர அந்தப் படை நிலை கொண்டுள்ள ‘மஞ்சள் கோட்டை’ தாண்டியது, மருந்துகள், மருத்துவ விநியோகங்கள், இடம்பெயர்ந்தவர்களுக்கான கூடாரங்கள் மற்றும் நடமாடும் வீடுகள் போன்ற உதவிகள் வருவதை தடுப்பது ஆகிய செயல்களில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
காசாவுக்கான உதவிகளையும் இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருவதோடு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த ஒக்டோபர் 10 தொடக்கம் அந்த மாத இறுதி வரையில் 13,200 உதவி லொறிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றபோதும் இந்தக் காலப் பகுதியில் வெறும் 3,203 லொறிகளே காசாவை சென்றடைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கான் யூனிஸில் இருக்கும் உதவி விநியோக மையத்தில் அரிசி, அடைக்கப்பட்ட அவரை மற்றும் எண்ணெய் வழங்கப்பட்டபோதும் பெரும்பாலானவர்கள் வெறுங்கையுடனேயே திரும்பியுள்ளனர். அந்த உதவிப் பொதியை பெற்றவர்கள் கூட அது தமது குடும்பத்திற்கு போதுமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
‘நாம் உதவிப் பொதி ஒன்றை பெற்றபோதும் எமக்கு அது போதுமானதாக இல்லை. இந்தப் பொதியை விடவும் எமது அடிப்படை தேவைகள் அதிகாமாக உள்ளன’ என்று காசா நகரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நர்மீன் டிரம்சி என்ற பெண், அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கையின்படி நாளொன்றுக்கு காசாவுக்கு 600 உதவி லொறிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றபோதும் அதில் 24 வீதமான அளவே அனுமதிக்கப்படுவதாக காசா அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
காசா போரை ஒட்டி ஆக்கிமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் நிலவுவதோடு நேற்று (03) காலை ஹெப்ரோன் வடக்கு வாயிலில் இஸ்ரேலிய குடியேறிகளால் பலஸ்தீன இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அஹமது ரபி அல் அட்ராஷ் என்ற அந்த இளைஞர் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் இந்த ஆண்டில் குடியேறிகளால் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்திருப்பதோடு அதுவே 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஐ தொட்டுள்ளது.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நப்லுஸ் நகரின் கிழக்கே இஸ்ரேலியப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது ஜமீல் அதப் ஹனானி என்ற இளைஞர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஹமாஸ் தொடர்;ந்து குற்றம்சாட்டுகின்றபோதும் அந்த அமைப்பு கடந்த ஞாயிறன்று மூன்று பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் கையளித்துள்ளது. செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அந்த உடல்களை பெற்ற இஸ்ரேல் அவை மூன்று படை வீரர்களுடையது என்பதை நேற்று உறுதி செய்தது.
இதனையடுத்து இன்னும் எட்டு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்கள் கைளிக்கப்பட வேண்டி உள்ளன. அமெரிக்க மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் உயிருடன் உள்ள 20 பணயக்கைதிகள் மற்றும் மரணித்த 28 பயணக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க ஹமாஸ் இணங்கியது.
இந்த உடல்களை கையளிப்பதை ஹமாஸ் வேண்டுமென்று தாமதிக்கச் செய்வதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் அந்த உடல்களை கண்டுபிடிப்பது மற்றும் மீட்பதில் சிக்கல் நிலவுவதாக அந்த அமைப்பு கூறி வருகிறது.
.jpeg)
No comments:
Post a Comment