5000 க்கும் மேற்பட்டோர் வெளியேற ஆயத்தம், தீர்வுகளை பட்ஜட்டில் எதிர்பார்க்கின்றோம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 5, 2025

5000 க்கும் மேற்பட்டோர் வெளியேற ஆயத்தம், தீர்வுகளை பட்ஜட்டில் எதிர்பார்க்கின்றோம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கவே சுமார் 2000 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் மேலும் 5000 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாககிக் கொண்டிருக்கின்றனர். எனவே இவ்வாறு ஆயிரக்கணக்கில் வைத்தியர்கள் மருத்துவ சேவையிலிருந்து நீக்குவதைத் தவிர்ப்பதற்கும், சுகாதாரத்துறையிலுள்ள ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் 2026 வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் சுமார் 2000 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 5000க்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து, இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

சுகாதாரத்துறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 8 யோசனைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பரிந்துரைக்கிறது. அவற்றில் பிரதானமானது விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் உட்பட அனைவரையும் நாட்டில் தக்க வைத்துக் கொண்டு அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கி மக்களுக்கு உயரிய சுகாதார சேவையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வைத்தியசாலைகள், சுகாதார நிலையங்களில் நிலவும் அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடுகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே வினைத்திறனான மருத்துவ சேவையை வழங்க முடியும்.

குறைந்த எண்ணிக்கையிலான வைத்தியர்களைக் கொண்டு சுகாதார சேவையை விரிவுபடுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் அது சாத்தியமற்றது. எனவே வைத்தியர்களின் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பட்டப்படிப்பிற்கான ஒத்துழைப்புக்களையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும் நாட்டிலுள்ள ஆரம்ப பிரிவு சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சுகாதார அமைச்சருடன் இது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றோம்.

கோரிக்கை விடுக்கப்பட்டு 4 மாதங்கள் கடந்தும் இதுவரையில் எமக்கான அழைப்பு கிடைக்கப் பெறவில்லை. கோரிக்கைகளைப் புறக்கணிக்காமல் பேச்சுவார்த்தைகள் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வருமாறு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment