உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுள்ளதாகவும், தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகவும் கூறி சமூக ஊடகங்களில் பரவும் பிழையான செய்தியை, ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்ன உறுதியாக மறுத்துள்ளார்.
நேற்றுமுன்தினம் (08) பாராளுமன்ற உயர்பீடக் குழுவின் அழைப்பின் பேரில் அவர் முன்னிலையானபோது, எழுப்பிய சில கேள்விகளுக்குப் பதிலளித்ததாகவும், அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக தாம் ஒருபோதும் குறிப்பிடவில்லை என்றும் ரவி செனவிரத்ன வலியுறுத்தியுள்ளார்.
எனினும், உயர்பீடக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஷாம் காரியப்பர் தனது X (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், தாம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த செனவிரத்ன, “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நாம் அடையாளம் கண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது இன்றையதினம் பாராளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர எம்.பியினால் கேள்விக்குட்படுத்தப்பட்டபோது, அதற்கு பதிலளித்த நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாராளுமன்ற குழுக்களில் அந்தரங்கமாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாகவும், அவரே முன்வந்து இது குறித்து பேசவில்லை எனவும், குறிப்பிட்டதோடு, அவ்வாறான விசாரணை தொடர்பான விடயங்களை பாராளுமன்றில் பேசுவதற்கும் முடியாது என குறிப்பிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, மேற்படி பரவிவரும் உண்மையற்ற செய்தியைத் தாம் முழுமையாக நிராகரிப்பதாகவு ரவி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த செய்தியைப் பரப்பியவர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அத்துடன் இந்தச் சம்பவத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவரது சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment