இஸ்ரேல் - ஹமாஸ் முதற்கட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டது : ட்ரம்ப் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 9, 2025

இஸ்ரேல் - ஹமாஸ் முதற்கட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டது : ட்ரம்ப் அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாபதிதி டொனால்ட் ட்ரம்ப், இன்று அறிவித்துள்ளார்.

இது மத்திய கிழக்கில் இரண்டு ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்கு கொண்டுவர ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதை அவர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகள் இதை வரவேற்றன.

இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின்படி, ஹமாஸிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக்கு அப்பால் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் என்றும் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளதோடு, விரைவில் பிணைக் கைதிகளை மீட்டுக் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பும் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

எகிப்து, கட்டார், துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், போர் நிறுத்தத்திற்கான முழுமையான காலக்கெடு மற்றும் காசாவின் போருக்குப் பிந்தைய நிர்வாகம் போன்ற முக்கிய சவால்கள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

No comments:

Post a Comment