லோரன்ஸ் செல்வநாயகம்
பாராளுமன்றங்களுக்கான கண்காணிப்பு தொடர்பான சர்வதேச நிறுவனம் (ஐசிபிஎஸ்) மற்றும் பொஸ்வானா சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 21ஆவது சர்வதேச மாநாட்டின் கணிப்பீட்டில் உலகின் சிறந்த தேர்தல் ஆணைக்குழுவாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மாதம் 03ஆம் திகதி இடம்பெற்றுள்ள 21ஆவது வருடாந்த மாநாட்டின் கணிப்பீட்டிலேயே எமது தேர்தல் ஆணைக்குழு முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை வெளியிடப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (08) விசேட கூற்றொன்றை முன்வைத்து இதனைத் தெரிவித்த பிரதமர் அது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், ”உலகிலுள்ள அனைத்து தேர்தல் முகாமைத்துவ நிறுவனங்களுக்குள் சிறந்த பிரஜைகள் வாழும் சமூகத்தை உருவாக்கியுள்ளமை, தேர்தல் துறையில் உபயோகிக்கப்படும் சரி பிழைகளை இனங்கண்டு ஆதாரப்பூர்வமான ஆய்வுகளை வெளியிட்டுள்ளமை போன்ற காரணங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கணிப்பீடு களிலேயே இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளது. இது நம் அனைவரதும் பாராட்டுக்குரியது.
இந்த சாதனைக்காக இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அதன் அனைத்து தரப்பினருக்கும், அரசாங்கத்தனதும், நாட்டு மக்களினதும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்” என்றும் பிரதமர் சபையில் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment