லோரன்ஸ் செல்வநாயகம்
இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் இன்று (09) எதிர்க்கட்சியினரால் அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஜெனீவா தீர்மானம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விரிவான உரையொன்றை ஆற்றினார்.
அந்த உரையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமைச்சரின் விசேட உரையைத் தொடர்ந்து, மேற்படி தீர்மானம் தொடர்பில் ஜெனீவாவில் அரசாங்கம் வாக்கெடுப்பை கோராமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கேள்விகளை எழுப்பினர். இதன்போது சபையில் சிறு சர்ச்சையும் ஏற்பட்டது.
அதன்போது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அது தொடர்பில் தெரிவிக்கையில், ”வெளிவிவகார அமைச்சர் சபையில் வழங்கிய பதில்களை வரவேற்கின்றோம். ஐ.நாவில் இலங்கை பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக ஆற்றிய உரையையும் நான் வரவேற்கின்றேன். ஆனால் அரசாங்கம் அங்கு ஏன் வாக்கெடுப்பைக் கோரவில்லை. வாக்கெடுப்பை கோரியிருந்தால் உலக நாடுகள் எம்முடன் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தியிருக்க முடியும்” என தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், ”எனது உரையில் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளேன். அதனை நீங்கள் புரிந்து கொள்ளாமல் கேள்வி கேட்கின்றீர்கள்” என குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அது தொடர்பில் தெரிவிக்கையில், ”ஏன் நீங்கள் வாக்கெடுப்புக்கு அச்சமடைய வேண்டும். அவ்வாறு அச்சமடைவது நல்லதல்ல. ஜீஎஸ்பி விடயத்தில் நாம் வாக்கெடுப்பைக் கோரினோம். அப்போது எமக்கு ஆதரவாக 400 வாக்குகளும் எதிராக சுமார் 100 வாக்குகளுமே கிடைத்தன” என தெரிவித்தார்.
அந்த சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக்க குறுக்கீடு செய்து வெளிவிவகார அமைச்சரின் இந்த உரை தொடர்பில் நாம் விவாதமொன்றை கோருகின்றோம் என்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், ”ஜெனீவா தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த விவாதத்தில் உங்களின் கருத்துக்களை முன்வையுங்கள்” என மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment