ஜனாதிபதியை சந்தித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் : மேம்படுத்த தேவையான திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 20, 2025

ஜனாதிபதியை சந்தித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் : மேம்படுத்த தேவையான திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களினால் பல்கலைக்கழக பட்டப்படிப்பு பாடநெறிகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் அவற்றை குறித்த காலத்தில் நிறைவு செய்ய முடியாமை காரணமாக பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாகியுள்ள சிக்கல்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் தொடர்பிலும் இங்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினர்.

அவ்வாறு தாமதமான பட்டப்படிப்புகளின் தரத்தைப் பாதுகாத்து, அவற்றை விரைவில் நிறைவு செய்யவும் இதுவரை முடிக்கப்படாத பணிகளை திறம்பட முடிக்கவும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த தேவையான திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இங்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்திற்கு தெரிவித்ததுடன், அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பணிக்குழாமினர் ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தொடர்ந்து அவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக, தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருடன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பீ.ஆர். வீரதுங்க, செயலாளர் சாருதத்த இளங்கசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment