கொலை செய்ய உடந்தையாக இருந்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ள இஷாரா செவ்வந்தி - News View

About Us

About Us

Breaking

Monday, October 20, 2025

கொலை செய்ய உடந்தையாக இருந்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ள இஷாரா செவ்வந்தி

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தமைக்கான காரணத்தை இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

“எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல ஆசை. பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'கெஹெல்பத்தர பத்மே' என்பவர் என்னை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்தார். அதனால்தான் நான் பணத்தை பெற்றுக் கொள்ளாமல் 'கணேமுல்ல சஞ்சீவ'வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தேன்“ என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“நேபாளத்தில் தலைமறைவாக இருக்கும்போது ஐரோப்பாவுக்கு செல்வதற்காக போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டது“ எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரையும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர்.

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment