(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போதைப் பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளையில் தெரிவித்திருந்தார். அவ்வாறெனில் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு நீக்கப்பட்டமைதான் அந்த நடவடிக்கையா ? என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் ஒரு முக்கிய விடயமாகும். இதற்கு முன்னர் எமது அரசாங்கங்கள் இருந்தபோது அமைச்சரவை மாற்றங்களைச் செய்தபோது, அது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களையும், கேலியான கருத்துக்களையும் கூறிய ஜே.வி.பி.யினருக்கு இன்று அதேநிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலங்களில் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஜே.வி.பி. கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தது. அதனால் அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களை நியமித்து அமைச்சரவையை அமைப்பதாக கூறினார்கள். ஆனால், அவர்கள் கொடுத்த அந்த வாக்குறுதியையும் இப்போது அவர்களே மீறி, புதிய அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் நியமிக்க நேரிட்டமை எண்ணி கவலையடைகின்றோம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நீங்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளீர்கள் என்று நாட்டின் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
இந்நிலையில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு தற்போது நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. அவ்வாறான சூழல் இந்த அரசாங்கத்தினாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த முயன்ற போதிலும், பின்னர் அரசாங்கத்தின் சதித்திட்டம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையகத்தில் கடந்த நல்லாட்சிக் காலத்தில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு கட்டப்பட்டிருந்த சில வீடுகள் தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு, அங்கு இந்த போதைப் பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முதல்படி எடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். ஆனால் எமக்குத் தெரியவரும் முதல்படி என்னவென்றால், பிமல் ரத்நாயக்க துறைமுக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைதான்.
கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமைக்கும் நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை மிகவும் ஆழமாக ஆராய வேண்டியது கட்டாயமாகும்.
எவ்வாறிருப்பினும் இலங்கை வரலாற்றில் இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய மோசடிச் செயல் இது என்பதை நாம் மக்களிடம் தெரிவிக்கின்றோம். விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் முக்கிய விடயங்கள் பலவற்றை தெரிவித்திருந்தார்.
அதேபோல், இந்தக் கொள்கலன்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முதலில் முறைப்பாடு செய்த டான் பிரியசாத் சில நாட்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், எமது சட்டத்தரணிகள் சங்கம் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளது. அந்த முறைப்பாடு தொடர்பாக இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மிகவும் துரதிர்ஷ்டவசமாக, மிக ஆபத்தான மோசடி குறித்து விசாரணை செய்யாத பொலிஸ், அமைச்சர்களுக்கு எதிரான அவதூறுகள் குறித்து நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளது.
323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து குற்றப் புலனாய்வு பிரிவிலும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் தொடர்ந்து முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றுவரை அது குறித்து எந்தவொரு நபரிடமிருந்தும் வாக்குமூலம் கூட பெறப்படவில்லை. அது பற்றி மௌனம் காக்கும் பொலிஸார் தொலைக்காட்சியில் கூறப்பட்ட ஒரு விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய முற்படுகிறது.
பொலிஸாருக்கு குற்றங்கள் என்றால் என்ன? தங்கள் கடமை என்ன? என்பது மறந்துவிட்டது. பொலிஸ்மா அதிபரே நீங்கள் இன்னொரு பூஜித் ஜயசுந்தரவாக மாற முயற்சிக்க வேண்டாம். அவர் இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார். இன்னொரு பொலிஸ்மா அதிபர் சிறையில் துன்பப்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றார்.
No comments:
Post a Comment