காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில் அங்கு அமுலில் உள்ள பலவீனமான போர் நிறுத்தம் பெறும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமின் மீது இஸ்ரேலியப் படை நேற்று முன்தினம் நடத்திய ஒன்றுக்கு மேற்பட்ட தாக்குதல்களில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினத்திலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிய துருப்புகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவரை இலக்கு வைத்தே மத்திய காசாவில் தாக்குதல் ஒன்றை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டது. இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் அது கூறியது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என அந்தப் போராட்ட அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார் வண்டி ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் அந்தக் கார் வண்டி வெடித்துச் சிதறியதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் நால்வர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மறுபுறம் காசாவின் மிகப்பெரிய நகர்புற பகுதியான காசா நகரின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகள் செல் குண்டு தாக்குதல்களை நடத்தியதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் இரண்டு ஆண்டுகள் நீடித்த போருக்கு பின்னர் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அங்கு போர் நிறுத்தம் எட்டப்பட்டு தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியபோதும் இஸ்ரேல் தொடர்ந்து போர் நிறுத்த மீறங்களில் ஈபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த ஒக்டொபர் 11 இல் போர் நிறுத்தம் எட்டப்பட்டதன் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 93 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேபோன்று இந்தக் காலப்பகுதியில் மேலும் 324 பேர் காயமடைந்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதேவேனை காசாவில் சர்வதேச அமைதிகாக்கும் படை ஒன்றை நிலைநிறுத்துவது தொடர்பில் மத்தியஸ்த தரப்புகள் கட்டாரில் நேற்று (26) பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தார். அங்கு சர்வதேச படை விரைவில் நிலைநிறுத்தப்படும் என்றும் டோஹாவில் கட்டார் எமிர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல்தானியை சனிக்கிழமை சந்தித்த பின்னர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
காசா போர் நிறுத்த உடன்படிக்கையின் ஓர் அம்சமாகவே அங்கு அமைதிகாக்கும் படை ஒன்றை நிலைநிறுத்துவது தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. இதில் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளைக் கொண்ட துருப்புகளை நிலைநிறுவத்துவது பற்றியே ஆராயப்பட்டு வருகிறது. எனினும் அந்த சர்வதேச படையில் எந்த நாடு பங்கேற்கும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த அமைதிகாக்கும் படையில் துருக்கி இடம்பெறுவதற்கு நெதன்யாகு ஏற்கனவே எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். ‘எந்தப் படைகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இஸ்ரேல் தீர்மானிக்கும்’ என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா போர் நிறுத்தத்தின்படி அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டி இருந்தபோதும் தொடர்ந்து 13 பணயக்கைதிகளின் சடலங்களை இஸ்ரேலிடம் கையளிப்பதற்கு தவறியுள்ளது. இந்த சடலங்களை கண்டுபிடிப்பது மற்றும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக ஹமாஸ் கூறி வருகிறது.
இந்நிலையில் சடலங்களை மீட்பதற்கு உதவுவதற்காக கனரக இயந்திரங்களுடன் எகிப்து வாகன தொடரணி ஒன்று காசாவுக்குள் நுழைந்திருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் அந்த வாகனங்களை காண முடிவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment