வரவு செலவுத் திட்டத்தில் சிறந்தவைகளும், சற்று சிந்தித்திருக்கலாம் என்று தோன்றும் விடயங்களும் உள்ளன - பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 8, 2025

வரவு செலவுத் திட்டத்தில் சிறந்தவைகளும், சற்று சிந்தித்திருக்கலாம் என்று தோன்றும் விடயங்களும் உள்ளன - பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த விடயங்களும் உள்ளன. சற்று சிந்தித்திருக்கலாம் என்று தோன்றும் விடயங்களும் உள்ளன. முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்பில் சற்று ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்திருக்கலாம் என்பது எமது நிலைப்பாடாகும். இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாரிய மாற்றங்கள் எவையும் இல்லை என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த வரவு செலவுத் திட்டத்தில் மூன்று கோணங்களில் அவதானம் செலுத்தியிருக்கலாம்.

முதலாவது வரவு மற்றும் செலவை முகாமைத்துவம் செய்தல், இரண்டாவது அதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்தின் பொறிமுறைகளுடன் சமநிலைப்படுத்தல், மூன்றாவது வர்த்தகர்கள், மக்கள் மற்றும் நாட்டுக்கான நன்மைகள் என்பவை குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தியிருக்க வேண்டும்.

இந்த மூன்று விடயங்களும் ஓரளவு உள்வாங்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் செயற்பாட்டு ரீதியிலான சிறிய விடயங்கள் பல உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

பெருந்தோட்டத் தொழிற்துறை தொடர்பிலும் இன்னும் ஆழமாக அவதானம் செலுத்தியிருக்கலாம். டிஜிட்டல் மயப்படுத்தல் தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்துக்கு உரித்தான வர்த்தக மறுசீரமைப்புக்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. கூறப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

வட் வரி விதிப்பிற்கான வரியறை குறைக்கப்பட்டுள்ளது. மாறாக புதிதாக எந்தவொரு வரியும் அறிமுகப்படுத்தப்படவில்லை. வரி ஸ்திரத்தன்மை பேணப்படுவது சிறந்த தீர்மானமாகும். பாரியளவு மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. எனினும் இவ்வாண்டை விட அடுத்த ஆண்டு வரவு மற்றும் செலவுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத் திட்டம் நிறைவடைந்தாலும், நிதியியல் ஒழுக்கத்தை பேண வேண்டும். வாகன இறக்குமதியை சமூக பாதுகாப்பு வரியின் கீழ் உள்ளடக்குவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உற்பத்தியின்போதும் இறக்குமதியின்போதும் வரி அறவிடப்படும் என்றும், விற்பனையின் பின்னர் வரி அறவிடப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரி அறவிடப்பட்டால் வாகனங்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

சமூக பாதுகாப்பு தொடர்பில் புதிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. அஸ்வெசும உள்ளிட்ட ஏனைய சில திட்டங்கள் தொடர்பில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டின் பின்னர் சமூக நலன்களுக்கு பாரியளவு நிதியை ஒதுக்க முடியாது. இதன் காரணமாக தற்போது வறுமைக் கோட்டிலுள்ள 25 சதவீதமானோரும், அதனை அண்மித்த நிலைமையிலுள்ள 10 சதவீதமானோரும் சற்று சவாலான குழுவாகவே காணப்படுவர்.

ஒட்டு மொத்தமாக இந்த வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த விடயங்களும் உள்ளன. சற்று சிந்தித்திருக்கலாம் என்று தோன்றும் விடயங்களும் உள்ளன. முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்பில் சற்று ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்திருக்கலாம் என்பது எமது நிலைப்பாடாகும்.

சிறிது சிறிதான யோசனைகள் பலவற்றை முன்வைப்பதை விட ஒரே சந்தர்ப்பத்தில் பொருளாதார நிலைமையை மாற்றக்கூடிய பிரதான வேலைத்திட்டத்தில் அவதானம் செலுத்தியிருக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment