வங்காள விரிகுடாவில் உருவான 'மொந்தா' சூறாவளி : பல இடங்களில் 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று : மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 26, 2025

வங்காள விரிகுடாவில் உருவான 'மொந்தா' சூறாவளி : பல இடங்களில் 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று : மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்றையதினம் (27) நாட்டின் வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகளில்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து “மொந்தா” எனும் புயலாக வலுவடைந்து, நேற்று (26) இரவு 11.30 மணிக்கு தென்மேல் மற்றும் அதை அண்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், 11.6° அகலாங்கும் மற்றும் 85.9° நெட்டாங்குகளுக்கு அருகே, முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 610 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இத்தொகுதியானது, வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (28) காலை அளவில் ஒரு கடுமையான சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன் பின் ஒக்டோபர் 28 ஆம் திகதி மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரு கடுமையான சூறாவளி புயலாக ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மறு அறிவித்தல் வரை கடல் பயணத்தில் ஈடுபடுவோர் மற்றும் மீன்பிடி சமூகங்கள் 8.20° வட அகலாங்கு மற்றும் 80-95° கிழக்கு நெட்டாங்கு பகுதிகளில் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள்.

அந்தக் கடல் பகுதிகளில் செயல்படுவோர் குறித்த கடல் பகுதிகளிலிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று 
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும் என்பதோடு, அப்பகுதிகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment