போதைப் பொருட்களை வேரோடு ஒழிப்பதற்காக “நாடே ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 27 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எமது நாட்டில் போதைப் பொருட்களின் பரவல் தேசிய ஆபத்தாக மாறியுள்ளமையுடன், போதைப் பொருள் கடத்தல்களை மையமாகக் கொண்டு அதிகமான குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், வினைத்திறனாக தீர்மானமெடுக்கும் பொறிமுறையைப் போலவே விரிவான மக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் குறித்த ஆபத்துக்களை வேரோடு இல்லாதொழிக்க வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக ‘நாடே ஒன்றிணைவோம்;’ எனும் பெயரிலான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விரிவான பரப்புரைச் செயன்முறை மூலம் சமூகத்தை இவ்வாபத்து பற்றி விழிப்புணர்வு செய்தல், போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய வலையமைப்பை இல்லாதொழித்தல், புனர்வாழ்வு வாய்ப்புக்களை அதிகரித்தல், பாவனையிலிருந்து விடுபடுவதற்கு விருப்பமானவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, ‘நாடே ஒன்றிணைவோம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை அவசரமானதும் துரிதமானதுமான தேசிய வேலைத்திட்டமாக ஆரம்பிப்பதற்கும் மற்றும் அதற்காக தேசிய வழிநடாத்தல் செயற்குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment