கட்டாய பௌதீக பரிசோதனைக்குட்படுத்தாது விடுவித்த 323 கொள்கலன்கள் தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமியுங்கள் : சபாநாயகரிடம் பிரேரணையை கையளித்த எதிர்க்கட்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 7, 2025

கட்டாய பௌதீக பரிசோதனைக்குட்படுத்தாது விடுவித்த 323 கொள்கலன்கள் தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமியுங்கள் : சபாநாயகரிடம் பிரேரணையை கையளித்த எதிர்க்கட்சி

லோரன்ஸ் செல்வநாயகம்

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பாக, ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு விசேட தெரிவுக்குழுவை நியமிக்க பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள இப்பிரேரணை செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் வைத்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. 

எதிர்க்கட்சியின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக எம்.பி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களான காவிந்த ஜயவர்தன, அலவத்துவல, ஹர்ஷண ராஜ கருணா மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான டி.வி. சானக ஆகியோர் சபாநாயகரின் அலுவலகத்தில் நேற்று சபாநாயகரை சந்தித்து குறித்த பிரேரணையை கையளித்தனர்.

அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏற்றுக் கொள்ளப்பட்ட சுங்க நடைமுறைகளுக்கு மாறாக கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 இறக்குமதி கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவிக்கப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள் பற்றி வெளிவரும் செய்திகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி வழங்கிய வழிகாட்டுதலின்படி திறைசேரி செயலாளரால் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, குறித்த குழு தமது அறிக்கையில் தொடர்புடைய விடயம் குறித்து தனது அவதானிப்பை முன்வைத்து கொள்கலன்கள் விடுவித்த முறை சட்டத்திற்கு மாறானது என்றும், ‘முறையான பரிசோதனை இல்லாமல் கொள்கலன்கள் விடுவிப்பது தேசிய பாதுகாப்பு, வருமான சேகரிப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு விடயங்களில் கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகிறதுஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுங்க அதிகாரிகள் சங்கம் குறித்த கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பான முறைகேட்டின் தன்மையைக் கருத்தில் கொண்டு, குறித்த கொள்கலன்களின் உள்ளடக்கம் குறித்து தனக்கு பொறுப்பேற்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்துள்ளதாலும், குறித்த கொள்கலன்கள் போதைப் பொருள், ஆயுதங்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டுவருவதற்கு சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பாராளுமன்றத்தில் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளால் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் பெருமளவில் கண்டுபிடிப்பு மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றல் உட்பட நாட்டில் சமீபத்தில் வெளிப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இவ்வாறான சந்தேகத்திற்குரிய நிலைமைகள் மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கின்றன என்ற நியாயமான அச்சம் மேலும் தீவிரமாகியுள்ளது.

பௌதீகப் பரிசோதனை இல்லாமல் கொள்கலன்கள் விடுவிப்பின் சட்டபூர்வத்தன்மை மற்றும் தகுதி, அதனுடன் தொடர்புடைய அரச அதிகாரபீடங்கள், அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பொறுப்புக்கூறல், குறித்த கொள்கலன்களில் ஏதேனும் சட்டவிரோத, தடைசெய்யப்பட்ட அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருந்ததா? மற்றும் இந்த செயல்முறையில் இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் வகிபாகம் மற்றும் பொறுப்பு, அத்தகைய முறைகேடுகளிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்காக உள்ள சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் நடைமுறைகளின் போதுமான தன்மை, எதிர்காலத்தில் அத்தகைய நிகழ்வுகள் நிகழ்வதை தடுப்பதை உறுதி செய்வதற்கு தேவையான சட்ட, நிர்வாக மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகள் ஆராயப்பட வேண்டும்.

பாராளுமன்றத்தின் சபாநாயகர் அல்லது அவர் பெயர் குறிப்பிடும் ஆளொருவர் குறித்த தெரிவுக்குழுவின் தலைவராக பணியாற்ற வேண்டும், தலைவர் சமூகமளிக்காத சந்தர்ப்பங்களில், பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதித் தலைவர்களில் ஒருவர் தெரிவுக்குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குவதற்கும், நிலையியற் கட்டளை 101 இன் ஏற்பாடுகளில் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியும் பங்கேற்கும் வகையில் தெரிவுக்குழு 30 உறுப்பினர்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

குறித்த தெரிவுக்குழுவிற்கு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 105 இல் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறித்த தெரிவுக்குழுவின் கூட்டங்களின் கோரம் நிர்ணயித்துக் கொள்ளுவதற்கும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 104 இன்படி தெரிவுக்குழு தனது கூட்டங்கள் நடத்தும் நேரம் மற்றும் இடத்தை தீர்மானித்துக் கொள்ளுவதற்கும், தெரிவுக்குழுவின் உதவிக்காக தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த நபர்கள் மற்றும் வல்லுநர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 109 இன்படி அவ்வப்போது இடைக்கால அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் அல்லது பாராளுமன்றக் கூட்டத்தொடர் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவதற்கும், ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன்படி குறித்துரைக்கப்பட்ட காலம் இருத்தல் வேண்டும் என்பதால்,விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் வழங்குவதற்கும் அதிகாரமளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment