இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்த பேச்சு ஆரம்பம் : பணயக் கைதிகள் விடுவிப்பிற்கு இணக்கம் : ட்ரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து விரிவான பேச்சு : இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 6, 2025

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்த பேச்சு ஆரம்பம் : பணயக் கைதிகள் விடுவிப்பிற்கு இணக்கம் : ட்ரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து விரிவான பேச்சு : இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிப்பு

காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இணக்கம் எட்டப்பட்ட நிலையில போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிகள் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு விரைந்துள்ளனர். 

எனினும் காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிப்பதோடு மேலும் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று (06) இடம்பெறும் இப்பேச்சுவார்த்தைகளில் கட்டார் மற்றும் அமெரிக்க தலையீட்டாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தின் ஓர் அங்கமாக இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு தயார் என ஹமாஸ் அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை (03) அறிவித்தது. 

எவ்வாறாயினும் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தின் ஏனைய விடயங்கள் குறித்து ஹமாஸ் அமைப்பு இணக்கத்தை வெளியிட்டிருக்கவில்லை.

போர் நிறுத்த திட்டத்தின் தொழில்நுட்ப விடயங்களை இறுதி செய்வதற்கு பேச்சுவார்த்தையாளர்களை எகிப்து செல்ல அறிவுறுத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார். 

மறுபுறம் இந்தப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் பிரதிநிதிகள் பங்கேற்பதை மத்தியஸ்தம் வகிக்கும் எகிப்து உறுதி செய்துள்ளது.

போர் தரப்புகள் இடையே நேற்று (05) ஆரம்பமான இந்த மறைமுகப் பேச்சுவார்த்தை இன்றைய தினத்திலும் நீடிக்கவிருப்பதாக எகிப்து அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 

இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் ட்ரம்பின் மருமகனான ஜரட் குஷனர் மற்றும் மத்திய கிழக்கிற்கான பிரதிநிதி ஸ்டீவ் விட்கொப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஹமாஸிடம் இருந்து ஏற்படும் தாமதங்களை பொறுத்துக் கொள்ளப்போவதில்லை என்றும் அந்தக் குழு உடன்படிக்கை ஒன்றுக்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்றும் அல்லது அனைத்து வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். 

காசாவில் இருந்து ஆரம்பக்கட்டமாக வாபஸ் பெறுவதற்கு இஸ்ரேல் இணங்கி இருப்பதாகவும் அந்த வரைபடம் ஹமாஸுடன் பகிரப்பட்டிருப்பதாகவும் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘ஹமாஸ் உறுதி செய்தவுடன், போர் நிறுத்தம் உடன் அமுலுக்கு வரும், பணயக் கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த கட்டமாக படைகள் வாபஸ் பெறும் நிலைமைகளை நாங்கள் உருவாக்குவோம்,’ என்று முன்மொழியப்பட்ட வரைபடத்துடன் அவர் பதிவிட்டுள்ளார்.

மறுபுறம் நெதன்யாகு வெளியிட்ட தொலைக்காட்சி உரையில், எதிர்வரும் நாட்களில் அனைத்து பணயக் கைதிகளையும் திரும்ப அழைத்துவர முடியுமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

‘ட்ரம்பின் திட்டத்தின் வழியாக இராஜதந்திர ரீதியாக அல்லது எமது இராணுவத்தின் மூலம் ஹமாஸின் ஆயுதம் களையப்படும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதம் களையப்படுவது குறித்து ஹமாஸ் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பதோடு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தாலேயே அதனைச் செய்வதாக அந்த அமைப்பு தொடர்ந்து கூறி வருகிறது.

ஹமாஸின் போர் நிறுத்த அறிவிப்பை உடன் வரவேற்ற ட்ரம்ப் ‘இது அந்த அமைப்பு அமைதிக்கு தயாராக இருப்பதைக் காட்டுவதாக’ குறிப்பிட்டதோடு இஸ்ரேல் குண்டுவீசுவதை உடன் நிறத்தவும் அழைப்பு விடுத்தார். 

எவ்வாறாயினும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்ததோடு ட்ரம்பின் அறிவிப்புக்குப் பின்னரான 24 மணி நேரத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்போது ஆங்காங்கே இடம்பெற்ற தாக்குதல்; சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டிருக்கும் அதேநேரம் காசா நகரில் உள்ள துபா பகுதியில் வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் சிறுவர்கள் உட்பட 18 கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலில் அருகாமையில் இருக்கும் பல வீடுகளும் சேதம் அடைந்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டை என இஸ்ரேல் வர்ணிக்கும் காசா நகர் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேல் அங்கிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் திரும்பக்கூடாது என்றும் இது ஆபத்தான போர் வலயம் என்றும் எச்சரித்து வருகிறது.

நகரெங்கும் இஸ்ரேலிய விமானங்கள் உக்கர தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருக்கும் குடியிப்பாளர்கள் நேற்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளனர். 

கடந்த சனிக்கிழமை இரவு நகரில் உள்ள வீடுகளின் கூரைகள் மீது இஸ்ரேலிய ஆளில்ல விமானங்களையும் கையெறி குண்டுகளை வீசியுள்ளன. இதன்மூலம் நகரின் சப்ரா மற்றும் ஷெய்க் ரத்வான பகுதிகளில் பல வீடுகளும் அழிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


காசா நகரின் மேற்கு பக்கமாக தற்போது அடைக்கலம் பெற்றிருக்கும் 37 வயது ரமி முஹமது அலி என்பவர், ‘ட்ரம்ப் எங்கே இருக்கிறார்?’ என்று கேள்வி எழுப்பினார். 

‘எதுவும் நடக்காதது போன்று குண்டுகள் வெடிப்பது நிற்கவில்லை, ஆளில்லா விமானங்கள் எல்லா இடத்திலும் குண்டுகளை வீசுகின்றன. ட்ரம்ப் கூறிய போர் நிறுத்தம் எங்கே?’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

காசா போருக்கு நாளையுடன் (07) இரண்டு ஆண்டுகள் எட்டும் நிலையில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 67,000 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

No comments:

Post a Comment