தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான 1,750 ரூபா நாளாந்த சம்பளத்தை எவ்வாறேனும் இந்த ஆண்டு நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சுமார் 202 ஆண்டுகளாக பூமியுடன் போராடி, இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களித்துவரும் மலையக சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்யும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும், ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று (12) முற்பகல் பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக கடந்த பொதுத்தேர்தலில் தங்கள் உறவினர் மற்றும் அண்டை வீட்டாரை பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்ததன் மூலம் மலையக சமூகம் வைத்த எதிர்பார்ப்பு ஒருபோதும் தோல்வி அடைய இடமளிக்கப்படமாட்டாது என்று வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வை உறுதிசெய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
அந்த மக்களின் சுகாதார உரிமைகளை உறுதி செய்தல், சுத்தமான குடிநீருக்கான உரிமையை உறுதி செய்தல், பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குதல் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கை அறிக்கையை யதார்த்தமாக்குவதற்காக, ஹட்டன் பிரகடனத்திற்கு இணங்க, மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமையை உறுதி செய்யும் நோக்கத்தில், இந்து - லங்கா IV ஆம் கட்டத்தின் 10000 வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் 2,000 பயனாளிகளுக்கு உரிமைப்பத்திரங்களை அடையாள ரீதியாக ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
மலையகப் பகுதிகளில் வசிக்கும் மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், சுற்றுச்சூழலுக்கு உகந்த அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான வீடுகளை வழங்குவது இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாக உள்ளதுடன், இந்த ஒரு வீட்டிற்காக இந்திய அரசாங்கம் 28 இலட்சம் ரூபாவும் இலங்கை அரசாங்கம் வீட்டின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 04 இலட்சம் ரூபாவும் செலவிட்டுள்ளது.
இந்த வீட்டுத்திட்டம் தொடர்பாக தொகுக்கப்பட்ட புத்தகத் தொகுப்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த பொருளாதார மற்றும் சமூக வாழ்வை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவிற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்கள் மற்றும் இந்தப் பணிகளை வழிநடத்தும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது நன்றி தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவின் அடையாளமாகவும், இந்தியாவும் இந்திய மக்களும், இலங்கை மற்றும் இலங்கை மக்களுக்கு காட்டப்படும் நெருக்கத்தின் அடையாளமாகவும் இந்த வீடமைப்புத் திட்டத்தை அடையாளப்படுத்தலாம்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகால உறவு இருப்பதை நாம் அறிவோம். குறிப்பாக கடந்த பொருளாதார வீழ்ச்சியின்போது, இந்தியா எங்களுக்கு பெரும் ஆதரவை வழங்கியது. அதேபோன்று பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் போதும் இந்தியா வலுவான ஆதரவை வழங்கியது.
மேலும், நமது நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் அதிகமான நிதியுதவிகளை எமக்கு வழங்குகிறது.
வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய மின்சக்தித் திட்டங்களைச் செயல்படுத்துதல், சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பால் உற்பத்தித் தொழில்களுக்கு ஆதரவு அளித்தல், மலையக மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கவும் எமக்கு ஆதரவு அளிக்கின்றது.
கடன் திட்டமாக பெறப்பட்ட அநுராதபுரம் புகையிரதப் பாதையின் சமிக்ஞை கட்டமைப்புத் திட்டத்தை, உதவித் திட்டமாக மாற்ற எனது இந்திய விஜயத்தின்போது, இந்தியப் பிரதமர் ஒப்புக்கொண்டார்.
எனவே, நமது நாட்டு மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையை மேம்படுத்துவதில் அளித்த ஆதரவிற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
மலையக சமூகம் எமது நாட்டில் தனித்துவம் வாய்ந்த சமூகமாகும். நமது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்த மக்கள் வகிக்கின்றனர். ஏறக்குறைய 202 ஆண்டுகளாக இந்த பூமியுடன் போராடி, தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அவர்கள் சிறப்பான பணியைச் செய்கிறார்கள்.
202 ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களில் பெரும்பாலோர் இலங்கைக்கான பயணத்தின் போது பல்வேறு ஆபத்துகளால் இறந்தனர். உண்மை என்னவென்றால், இந்த 202 வருடங்களாக அவர்கள்பல சிக்கல்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களுக்கு வசதியான வாழ்க்கையை வழங்க ஒரு அரசாங்கமாக, பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதன்போது, பல துறைகளில் கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்த நாட்டில் ஒரு அங்குல நிலமும் சொந்தமாக இல்லாத ஒரு சமூகம் எம்மிடையே வாழ்கிறது. அந்த மக்களுக்கு நிலத்தின் உரிமையையும் வீட்டின் உரிமையையும் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்தப் பணியை நிறைவேற்றுவதற்கான வேலைத்திட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். மேலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும். இந்த மக்கள் நீண்ட காலமாக ரூ.1750 சம்பளம் கோரி வருகின்றனர். எந்த வகையிலாவது, இந்த ஆண்டிற்குள் அந்த உரிமையை வழங்க
நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், நமது நாட்டில் போசாக்குப் குறைபாடு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பின்மை ஆகியவை மலையக மக்களிடையே மிக அதிகமாக உள்ளன.
எனவே, சுகாதாரப் பிரச்சினைகளில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது, தேவையான வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களை வழங்குவது மற்றும் மருந்துகளை வழங்குவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். எனவே, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.
மேலும் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான மக்களின் உரிமையை நாம் உறுதி செய்ய வேண்டும். தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும். அதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதியை ஒதுக்க எதிர்பார்க்கிறோம்.
இந்த சமூகம் எதிர்கொள்ளும் சுழற்சி வறுமை பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கான முக்கிய கருவிகளில் கல்வி ஒன்றாகும். கல்விக்கும் வறுமைக்கும் இடையே பாரிய தொடர்பு உள்ளது. எனவே, மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதில் கல்வி ஒரு முக்கிய காரணியாகும். எனவே, தோட்டப் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிகளை நாம் ஆய்வு செய்துள்ளோம். ஒவ்வொரு பிள்ளைக்கும் அவர்களின் சொந்த மொழியில் கல்வி பெறும் உரிமையை நாம் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், உள சுதந்திரம் மிகவும் முக்கியமானது. வசிக்க ஒரு வீடு, வருமான ஆதாரம், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை, பிள்ளைகளுக்கு கல்வி, மன நலம் ஆகியவை எந்தவொரு பிரஜையினதும் அடிப்படை உரிமைகள். அதற்காக நாம் செயற்படுகிறோம்.
நமது நாட்டில் மலையக சமூகத்தினருக்கு கலாசார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர்களுக்கு உரிய கௌரவம் மற்றும் அங்கீகாரம் குறைவாகவே உள்ளது. எனவே, அனைத்து மக்களினதும் கலாசார உரிமைகளுக்கு உரித்தாக வேண்டிய கௌரவம், அடையாளம் மற்றும் மதிப்பும் அளிக்கும் சமுதாயத்தை உருவாக்க நமது அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கலாசாரத்தின் அடையாளத்தையும் மதிக்கும், அந்த அடையாளத்தை விரோதத்தின் அடையாளமாகப் பயன்படுத்தாத ஒரு புதிய சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். எனவே, இந்த சமூகத்திற்கு அதற்குரிய பொருளாதார வாழ்க்கையையும் அதற்குரிய சமூக வாழ்க்கையையும் வழங்குதல் என்ற இரண்டு இலக்குகளை நோக்கி நாம் செயல்பட்டு வருகிறோம்.
பல தசாப்தங்களாக மலையக சமூகம் தேர்ந்தெடுத்த அரசியல் செயற்பாடுகள் இருந்தன. பல தலைமுறைகளாக பல அரசியல் முகாம்களுடன் இணைந்து பணியாற்றி வந்தது. ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் முதன்முறையாக பழைய அரசியல் முகாம்களை நிராகரித்து புதிய பயணத்தில் நம்பிக்கை வைத்து புதிய எதிர்பார்ப்புகளுடன் எமது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர கடுமையாக உழைத்தது.
முதன்முறையாக, மலையக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான சகோதர சகோதரிகள் தேசிய அரசியல் செயற்பாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் முறையாக, உங்கள் உறவினர் மற்றும் அண்டை வீட்டார் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது இலங்கை அரசியலில் ஒரு பெரிய மாற்றமாகும். அந்த நம்பிக்கையை சிறிதும் தோல்வி அடையச் செய்யாது, அந்த நம்பிக்கையை வலுப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்லும் பொறுப்பை நாம் நிறைவேற்றுகிறோம்.
மேலும் இந்தப் பகுதிகளில் போதைப் பொருள் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவந்து, நமது பிள்ளைகளை போதைப் பொருட்களிலிருந்து பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். அந்த அச்சுறுத்தலை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதற்காக நாம் எடுத்த நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.
இலஞ்சம் மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவர நாம் பல வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான அரசியல் ஆபத்தானது. அந்தப் புரிதலுடன் நாம் செயல்படுவோம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். இந்தப் பொருளாதார வெற்றிகள் சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களையும் நாம் செயல்படுத்தி வருகிறோம்.
நாம் உங்களுடன் உடன்பட்ட பல்வேறு விடயங்கள் உள்ளன. அந்த விடயங்களை நிறைவேற்றும் சுமையை எமது தோள்களில் சுமந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற நாம் செயற்படுகிறோம். நமது நாட்டை இருந்த நிலையிலிருந்து மிக வெற்றிகரமாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்று எமக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
மேலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிது சமன் ஹென்னாயக, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, உட்பட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment