(எம்.மனோசித்ரா)
இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வரும் போக்கு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான எச்.ஐ.வி நோயாளர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி என்பது உலகளவில் குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தும் மிகக் கடுமையான பால்வினை வைரஸ்களில் ஒன்றாகும்.
இது நேரடியாக உடலின் நோயெதிர்ப்பு அமைப்பைத் தாக்கி பலவீனப்படுத்துகிறது. இதனால் சாதாரண இருமல் அல்லது சளி போன்ற சிறிய நோய்கள்கூட ஆபத்தானதாக மாறக்கூடும். இதுவே இந்த வைரஸின் மிகவும் ஆபத்தான அம்சம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் பதிவான எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதன் அதிகரித்த போக்கினை காண்பிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 2021ஆம் ஆண்டு 411 நோயாளர்களும், 2022 இல் 607 நோயாளர்களும், 2023 இல் 697 நோயாளர்களும், 2024 இல் 824 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனங்காணப்பட்ட நோயளர்களின் பெரும்பாலானவர்கள் ஆண்கள் ஆகும். இதில் ஆண் - பெண் விகிதம் 7:1 ஆக இருந்தது. சுகாதார அமைச்சின் தரவுகளுக்கமைய 2024 மார்ச் நிலைவரப்படி, நாட்டில் எச்.ஐ.வி தொற்றுடன் பதிவான மொத்த நபர்களின் எண்ணிக்கை 6,740 ஐ எட்டியுள்ளது.
எச்.ஐ.வி பரவல் குறைவாக உள்ள நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பது குறித்துச் சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே அதிகரித்து வரும் தொற்றுகளின் எண்ணிக்கை, உடனடிக் கவனத்தை ஈர்க்க வேண்டிய ஒரு வளர்ந்து வரும் போக்காக இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment