TikTok ஒப்பந்தத்தை சீன ஜனாதிபதி ஏற்றுக் கொண்டடார் : ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Saturday, September 20, 2025

TikTok ஒப்பந்தத்தை சீன ஜனாதிபதி ஏற்றுக் கொண்டடார் : ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், TikTok தொடர்பான வணிக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் TikTok செயலியின் அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் மாற்றம் செய்வது தொடர்பில் சீன ஜனாதிபதி ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அவ்வொப்பந்தத்தை பூர்த்தி செய்வதே இனி உள்ளது எனவும் ஒவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.

அதேநேரத்தில், சீன அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஒப்பந்தம் இன்னும் சட்டபூர்வ ஆய்வுகளுக்கும் சந்தை கொள்முதல் விதிகளுக்குமான அடிப்படை கட்டத்தில் உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் நெறிமுறை மாற்றங்கள் சீன சட்டமுறைப்படி அமுல்படுத்தப்பட வேண்டும் என கருத்து வைக்கப்பட்டுள்ளது.

இரு தலைவர்களும் அடுத்ததாக APEC மாநாட்டில் தென் கொரியாவில் சந்திப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர், அப்போது ஒப்பந்தத்தின் முழு வடிவமும் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த 2024 ஏப்ரல் மாதம் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (Protecting Americans from Foreign Adversary Controlled Applications Act) கொண்டு வந்த கூட்டாட்சி சட்டம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, சீனாவிற்கு சொந்தமான TikTok செயலியை பாதுகாப்பு காரணங்கள் தெரிவித்து தடை செய்தது. 

அந்தச் சட்டத்திற்கு அமைய, அமெரிக்காவிற்குள்ளான செயற்பாடுகளை அசெயலியின் தாய் நிறுவனமான ByteDance விற்பனை செய்யவில்லையெனில் அச்செயலியை தடை செய்வதற்கான கட்டுப்பாட்டை விதித்திருந்தது.

இது சீன தாய் நிறுவனமான ByteDance மீது தேசிய பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டியது. அதற்கமைய 2024 ஏப்ரலில், அந்நிறுவனத்தின் அமெரிக்க சார்ந்த நடவடிக்கைகளை அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட கொள்வனவாளருக்கு விற்க 9 மாதங்கள் அவகாசம் அளிக்கும் குறித்த சட்டத்தில் கையெழுத்திட்டார். அதற்கு இணங்காவிட்டால் முழுமையான தடையை எதிர்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

2025 ஜனவரி மாதம் குறித்த தடை அமுலுக்கு வந்தபோது டிக்டொக் அமெரிக்காவில் மூடப்பட்டது. அமெரிக்க சட்டத்தின் கீழ் இந்த செயலியை பார்வையிட முடியாது என அச்செயலியின் திரையில் காண்பிக்கப்பட்டது. இதன் போது அப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் தங்கள் அப் ஸ்டோர்களில் இருந்து டிக்டொக்கை நீக்கியிருந்தன.

இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள் அந்த தடையை மாற்றியமைத்தார். 75 நாட்களுக்கு அந்த தடை அமுலாக்கத்தை தாமதப்படுத்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அமெரிக்காலவில் அந்த செயலி இயங்க ஆரம்பித்தது. ஆயினும் அரச நிறுவனங்களில் அதனை பயன்படுத்தும் தடை இன்னும் உள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த காலக்கெடுவை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் நீடித்தார். அதனைத் தொடர்ந்து இதற்கான எந்தவிதமான அபராதமும் விதிக்கப்படாது என அரசாங்கம் உறுதியளித்த பின்னர் அப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் அதற்கான அணுகலை தொடர்ந்து வழங்கின.

அமெரிக்கர்களை உளவு பார்க்க அல்லது பொதுமக்களின் கருத்தை பாதிக்க சீனா மிகப்பெரிய பிரபலமான இந்த தளத்தை பயன்படுத்தக் கூடும் என்ற அச்சத்தை மையப்படுத்தியதாக அமெரிக்காவின் பாதுகாப்பு கவலைகள் உள்ளன.

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டங்கள் காரணமாக, பைட் டான்ஸை நிறுவனம் பயனர் தரவுகளை ஒப்படைக்கவோ அல்லது உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தக்கூடுமென முன்னாள் FBI பணிப்பாளர் கிறிஸ்டோபர் ரே, அமெரிக்க செனட்டர்களை எச்சரித்திருந்தார்.

அத்துடன் நீதிமன்ற ஆவணங்களின்படி , Slack அல்லது Microsoft Teams போன்று பணியிடங்களுடன் தொடர்பாடல் தளமான Lark இனை பயன்படுத்துவதன் மூலம் துப்பாக்கி கட்டுப்பாடு, கருக்கலைப்பு மற்றும் மதத்தின் அடிப்படையில் அமெரிக்க பயனர்களின் முக்கியமான தரவுகளை பெற்றிருப்பது போல் டிக்டோக் தளமும் அத்தகவல்களை சேகரித்துள்ளதாக கடந்த வருடம் நீதித்துறை தெரிவித்திருந்தது .

சீன செல்வாக்கு பிரசாரங்கள், அமெரிக்க குடிமக்கள் பற்றிய பெருமளவிலான தரவு சேகரிப்பு, பயனர்களின் சாதனங்களை மாற்றியமைக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் ஆகிய மூன்று முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டி TikTok தொடர்பில் பாதுகாப்பு வல்லுநர்கள் நீண்ட காலமாக கவலை தெரிவித்து வருகின்றனர். .

ஆயினும் நேற்றைய உரையாடலைத் தொடர்ந்து, தற்போதைய ஒப்பந்தத்திற்கு அமைய, ByteDance இன் பங்கு 20% இற்குக் கீழ் குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Oracle உள்ளிட்ட ஒரு சில அமெரிக்க முதலீட்டாளர் நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், சரியான வர்த்தக நெறிமுறை மற்றும் சட்டரீதியான ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி, எந்தவொரு ஒப்பந்தமும் ByteDance நிறுவனத்தின் உரிமைகள் மற்றும் தொழில்நுட்ப (algorithm) பகிர்வு சம்பந்தப்பட்ட புதிய சட்டப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய ரீதியில் அணுகப்பட வேண்டுமென சீன அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் TikTok தளத்தில் 135 மில்லியனுக்கும் அதிகமான செயற்பாட்டில் உள்ள பயனர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் தனது அதிகாரப்பூர்வ கணக்கைத் தொடங்கிய வெள்ளை மாளிகையும் அடங்கும். இருப்பினும் அரசாங்க சாதனங்கள் இன்னும் கூட்டாட்சி சட்டத்தின் கீழ் இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment