நாட்டில் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்த நிலைமையைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடக சந்திப்பில் பங்கேற்ற வைத்தியர் சுராஜ் பெரேரா இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "2022 ஆம் ஆண்டில், அடையாளம் காணப்பட்ட புற்றுநோய் நோயாளிகளில், 904 பேர் சிறுவர்கள் ஆவர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது சிறுவர் பருவ புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படவில்லை என்பது தெளிவாகக் காட்டுகிறது. இந்த எண்ணிக்கை பொதுவாக 600 முதல் 800 வரம்பிற்குள் இருந்தது. தற்போது, ஆண்டுதோறும் சுமார் 900 சிறுவர் பருவ புற்றுநோயாளர்கள் பதிவாகின்றன.
தலைமை பதிவாளர் திணைக்களத்தின் கூற்றுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டுக்கான தரவுகளும் சேகரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் குணமடையும் திறன் இருந்தபோதிலும் தாமதமாக கண்டறியப்பட்ட நோயாளிகளும் உள்ளனர். இந்த உயிரிழப்புக்களை மேலும் குறைக்கலாம். அதேபோல், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை நாடினால் சிக்கல்களையும் குறைக்கலாம்.
No comments:
Post a Comment