உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் முக்கிய சாட்சிகள் பலவற்றை மறைப்பதில் ஈடுபட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானி தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தாக்குத்தல் குறித்த முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்த விடயத்தில் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதானி ஆதாரங்களை மறைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் அவரின் தலைமையில் பணியாற்றிய அதிகாரிகள் சாட்சியங்களை மாற்றுவதில் உதவியதாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பிரதானி விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் 257 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500 ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பல பிரிவுகள் மூலம் நடத்தப்பட்டன, கடந்த காலங்களில், விசாரணையைத் தடுத்ததாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
2019 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டிருந்த பலர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து நாடு முழுவதும் உள்ள பிற பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டனர்.
அதன் பிறகு, விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட அதிகாரி ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டார், தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக செயற்படும் ஷானி அபேசேகர மீண்டும் இந்த விசாரணைகளை பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்.
No comments:
Post a Comment