காசா நகருக்குள் தொடர்ந்து ஊடுருவும் இஸ்ரேலிய தரைப்படை : முஸ்லிம் நாடுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை : இஸ்ரேலுக்கு நெருக்கமான பல மேலைத்தேய நாடுகள் பலஸ்தீனை அங்கீகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 24, 2025

காசா நகருக்குள் தொடர்ந்து ஊடுருவும் இஸ்ரேலிய தரைப்படை : முஸ்லிம் நாடுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை : இஸ்ரேலுக்கு நெருக்கமான பல மேலைத்தேய நாடுகள் பலஸ்தீனை அங்கீகரிப்பு

காசா நகரில் இஸ்ரேலியப் படை தனது தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து வருதோடு இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு மற்றும் தெற்கில் இருந்து நகரின் மையப்பகுதியை நோக்கி முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மாநாட்டில் பிரான்ஸ் உட்பட இஸ்ரேலுக்கு நெருக்கமான மேலும் பல மேற்குலக நாடுகளும் பலஸ்தீன தனிநாட்டை அங்கீகரித்திருக்கும் நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் காசா நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (23) முஸ்லிம் நாடுகளின் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டிரம்ப் எதிர்வரும் செப்டெம்பர் 29 ஆம் திகதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்கவிருக்கும் நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

டிரம்ப் நேற்று (23) ஐ.நா. பொதுச் சபையிலும் உரையாற்றி இருந்தார். பலஸ்தீன தனி நாட்டுக்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையிலேயே பல நாடுகளும் பலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை வழங்கி இருந்தன. 

இந்த வாரத்தில் உலகத் தலைவர்கள் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவதோடு அந்த வரிசையில் இரண்டாமவராகவே டிரம்பின் உரை இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி ஐ.நாவில் உரையாற்றவுள்ளார்.

காசா நகரை கைப்பற்றும் தரைவழி படை நடவடிக்கையை ஆரம்பித்திருக்கும் இஸ்ரேலியப் படை அங்கு உக்கிர தாக்குதலை நடத்துவதோடு நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் வகையில் இஸ்ரேலியப் படை பீரங்கி மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குடியிருப்பாளர்கள் தெரித்துள்ளனர்.

இஸ்ரேலியப் படை வெடி பொருட்களை நிரப்பிய கவச வாகனங்களை பயன்படுத்தி வீடுகளை வெடிக்கச் செய்து வருதாகவும் பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டை என காசா நகரை இஸ்ரேல் கூறி வருவதோடு அங்கு இஸ்ரேல் இராணுவத்தின் மூன்று கவசப் பிரிவுகள் மற்றும் காலாட்படைப் பிரிவுகள் செயற்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து சனநெரிசல் கொண்ட நகர மையத்தை நோக்கி முன்னேறி வருவதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

ரன்டிசி சிறுவர் வைத்தியசாலை மற்றும் சிறப்பு கண் வைத்தியசாலை ஒன்றுக்கு அருகே இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து நோயாளர்கள் வெளியேற்றப்பட்டு அந்த வைத்தியசாலைகள் மூடப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மறுபுறம் வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதலின்போது 27 வயது நெடனல் பொசக்லோ என்ற படை வீரர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. 

இதன்படி 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் உட்பட போர் ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.

காசாவில் நேற்றுக் காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 29 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் 18 இற்கு அதிகமானவர்கள் காசா நகரில் கொல்லப்பட்டவர்களாவர்.

‘நாங்கள் உறுதியானவர்கள் அல்ல, நாங்கள் உதவியற்றவர்கள். தெற்கே செல்ல எங்களிடம் பணம் இல்லை, நாங்கள் அவ்வாறு செய்தால் இஸ்ரேலியர்கள் எங்கள் மீது குண்டு வீச மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, எனவே நாங்கள் தங்கியிருக்கிறோம்,’ என்று காசா நகரத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஹுதா என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் காசா நகரில் இருந்து கூட்டமாக மக்கள் வெளியேறி வருகின்றபோதும் அங்கு கணிசமான மக்கள் தொடர்ந்து தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment