(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாடசாலை மாணவர்கள் ஒழுக்கமற்ற வகையிலோ அல்லது முறையற்ற வகையிலோ செயற்படும்போது ஆசிரியர்கள், பெற்றோர்கள் அவர்களை தண்டித்தால் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ள தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தின் பிரகாரம் அவர்கள் குற்றவாளிகளாக்கப்படுவார்கள். இச்சட்டத்தில் அவமதிப்பு என்பதற்கு பொருள் கோடல் வழங்கப்படவில்லை. இச்சட்டம் பெற்றோர், ஆசிரியர்களுக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும். பிள்ளைகளின் ஒழுக்கத்தை கவனத்திற் கொண்டு இவ்விடயம் குறித்து சகல தரப்பினருடனும் விரிவாக கலந்துரையாடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 2005 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க உடலியல் ரீதியிலான தண்டனை நீக்கல் சட்டத்தின் ஊடாக 25 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் உடலியல் ரீதியான தண்டனை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதுவொன்றும் புதிய விடயமல்ல, புதிய சட்டத்திருத்தத்தின் ஊடாக உடலியல் ரீதியிலான தண்டனையை நீக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு பாரதூரமான நிலைக்கு கொண்டு செல்லும் வழி உருவாக்கப்படுகிறது.
இந்த சட்டத்திருத்தம் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் விரிவான உரையாற்றினார். அவர் குறிப்பிட்ட விடயங்களுடன் நானும் உடன்படுகிறேன். இருப்பினும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த சட்டத்தில் கலாச்சாரம், ஒழுக்கம் மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடைய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கும் இந்த சட்டத்தால் பாதிப்பு ஏற்படும்.
இந்த சட்டத்தில் 308 (4) ஆம் பிரிவின் ஆ பிரிவில் ' குறைந்தபட்ச அளவில் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் உடலியல்; ரீதியில் தண்டனையளித்தால் அது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டம் பற்றி குறிப்பிட்ட அமைச்சர் மாணவிகள் பாடசாலை சீறுடையை கட்டையாக அணிந்து வருதல், விரல்களுக்கு நிறப்பூச்சி பூசுதல் பற்றி குறிப்பிட்டிருந்தார். பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்கள் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த சட்டத்தில் குற்றமாக கருதப்படும். அவமதிப்பு என்பதற்கான வரைவிலக்கணம் இந்த சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் பாடசாலையின் ஒழுக்க நெறி நடவடிக்கைகள் மற்றும் வீடுகளின் ஒழுக்க நடவடிக்கைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகும். உடலியல் ரீதியிலான தண்டனைகளுக்கு நாங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்த சட்டத்தில் உடலியல் ரீதியிலான தண்டனையல்லாத விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதுவே பிரச்சினை. குறைந்த பட்ச அவமதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இந்த சட்டத்தில் குற்றமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் குறைந்தபட்ச அவமதிப்பு என்பதற்கு எவ்விடத்திலும் விரிவான விளக்கமளிக்கப்படவில்லை. எவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளிக்க முடியும். ஒருவருக்கு அவமானம் பிறிதொருவருக்கு அவமானமில்லாததாக இருக்க முடியும். காயம் என்பதற்கு தண்டனை சட்டக்கோவையில் பொருள்கோடல் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அவமானம் என்பதற்கு பொருள்கோடல் வழங்கப்படவில்லை.
16 வயதுக்கு மேற்பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளை சுய விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் தொடர்பில் ஈடுபட்டு பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் அகப்படும்போது அவர்கள் ஒழுக்க நெறிமுறைகளுக்கு அமைய தண்டிக்கப்பட்டால் இந்த சட்டத்தின் பிரகாரம் அவர்கள் அதனை அவமானப்படுத்தலாக கருதி பெற்றோர் அல்லது ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பதே இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒழுக்கம் பற்றி பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கூட கடுமையாக அறிவுரை வழங்க முடியாத நிலை ஏற்படும். இதிலேயே பிரச்சினை காணப்படுகிறது.
இந்த சட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள் அல்லது பிள்ளைகளுக்கு பொறுப்பாக உள்ளவர்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். மாணவர்களை சிறு அளவில் கூட அடிக்க முடியாது. இவ்வாறான தீர்மானங்கள் தண்டனைக்குரியதாகவே அமையும்.
ஆகவே இந்த சட்டம் குறித்து சகல தரப்பினருடனும் விரிவாக கலந்துரையாடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment