அறுகம்பேயில் உள்ள இஸ்ரேலின் சபாத் இல்லத்தினால் மக்கள் பீதியடைந்தால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை - அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 26, 2025

அறுகம்பேயில் உள்ள இஸ்ரேலின் சபாத் இல்லத்தினால் மக்கள் பீதியடைந்தால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை - அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அறுகம்பேயில் அமைந்திருக்கும் இஸ்ரேலின் சபாத் இல்லத்தின் நடவடிக்கைகள் மக்கள் பீதியடையும் வகையில் இடம்பெறுமாக இருந்தால், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உதுமாலெப்பை தனது கேள்வியில், பொத்துவில், அறுகம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள இஸ்ரேலின் சட்டவிராேத சபாத் இல்லத்தை மூடிவிட வேண்டும் என பொத்துவில் பிரதேச சபை ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் பொத்துவில் பிரதேச சபை அமர்விலும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதனை தடுப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறேன் என்றார்.

அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், பொத்துவில், அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அருகில் இஸ்ரேலுக்கு சொந்தமான சபாத் இல்லம் இயங்கி வருவது தொடர்பில் பொத்துவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானம் குறித்து எமக்கு அறிவித்திருக்கிறது.

அதன் பிரகாரம் இதற்கு தேவையான நீண்டதொரு தலையீட்டை இலங்கை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அதேபோன்று இது தொடர்பான தகவல்களை தேடிப்பார்த்து, நீதிமன்றத்துக்கு தகவல் வழங்கி இருக்கிறது.

அதேபோன்று சபாத் இல்லாம் அமைக்கப்பட்டிருக்கும் காணி, முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வெளிநாட்டு பிரஜை ஒருவர் விலைக்கு பெற்றுக் கொண்டிருக்கிறார். என்றாலும் அதன் உரிமையாளர் தற்போது அந்த இடத்தில் இல்லை என்பது பிரதேச செயலகத்தினால் தேடிப்பார்க்கும்போது தெரியவந்துள்ளது. சில நேரம் அவர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கலாம்.

அதேநேரம், அந்த இடத்தில் இடம்பெறக்கூடிய விடயங்கள் மக்கள் குழப்பமடையும் வகையில் இடம்பெறக்கூடாது என்றும், அந்த இடம் விடுதி அமைப்பில் செயற்படுவதாக இருந்தால், அந்த விடயத்துக்கு மாத்திரமே அதனை பயன்படுத்துமாறு நீதிபதி ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

இதற்கு பின்னர் மக்கள் பீதியடையும் வகையில் ஏதாவது சம்பவம் இடம்பெற்றால், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

சட்டவிரோதமான இந்த சபாத் இல்லத்தை அகற்றுவதற்கான அதிகாரம் எமது அமைச்சுக்கு இல்லை. அது பாதுகாப்பு அமைச்சுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். அதனால் பாதுகாப்பு அமைச்சிடம் இது தொடர்பான விடயங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment