(எம்.ஆர்,எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் ஏற்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்த வெளிப்படைத் தன்மையை, அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு மாத்திரமே அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது. அரசாங்கம் தொடர்ந்து இவ்வாறு செயற்பட்டுவந்தால், மீண்டும் மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெறுவதை தடுக்க முடியாமல் போகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி பிரச்சினைகளால் மக்கள் ஆட்சியாளர்கள் தொடர்பில் விரக்தியடைந்தார்கள். இதன் காரணமாக 2022 இல் நாட்டுக்குள் மக்கள் போராட்டம், எழுந்தது.
இந்த போராட்டம்தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக அமைந்தது. அதனால் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி இருந்தது. வெளிப்பட்டைத்தன்மை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தது. அதன் பிரகாரமே அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைத்தது.
ஆனால் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை பார்க்கும்போது, அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு மாத்திரம் செயற்படுத்துவதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதியும் எங்கு சென்றாலும் சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்து வருகிறார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசாங்க்ததுக்கு தெரிவிக்கப்பட்ட முதலாவது குற்றச்சாட்டு, மன்னார் காற்றாலையை கேள்விக்கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்துக்கு வழங்காமல் வேறு நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பாகும். அது ஜனாதிபதிக்கு நெருக்கமானவர். இது தொடர்பில் இலஞ்சல் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்படவி்லலை..
அதேபோன்று சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் வெளியேற்றப்பட்ட 309 கொள்கலன்கள் தொடர்பில் நாட்டுக்குள் பேசு பொருளாக இருந்தது. அந்த கொள்கலன்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் தேடிப்பார்க்க ஜனாதிபதியால் விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு, அறிக்கையும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.
ஆனால் அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் போனதால், நாங்கள் அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தோம். அந்த அறிக்கையில் பல விடங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அண்மையில் 2 கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அதில் ஐஸ் போதைப் பொருள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த இரண்டு கொள்கலன்களையும் பரிசாேதனை செய்தே சுங்கத்தில் இருந்து வெளியேற்றியதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பரிசோதனை செய்த இரண்டு கொள்கலன்களிலும் ஐஸ் போதைப் பொருள் இருந்தது என்றால், பரிசோதிக்காமல் வெளியேற்றப்பட்ட கொள்கலன்களின் நிலைமை தொடர்பில் யார் பதில் சொல்வது?
அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது. அதேநேரம் இந்த கொள்கலன்களை வெளியேற்ற உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட சுங்கத்தின் உதவி பணிப்பாளரை, பணிப்பாளராக நியமித்து பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் வெளிப்படைத்தன்மை எங்கே என அரசாங்கத்திடம் கேட்கிறோம்.
மேலும் இரண்டு கொள்கலன்களையும் கொண்டுவந்த அனைவரையும் கண்டுபடித்து கைது செய்திருக்கிறோம். ஆனால் இந்த இரண்டு கொள்கலன்களையும் சுங்கத்தில் இருந்து வெளியேற்றியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களை கைது செய்ய ஏன் காலம் கடத்தி வருகிறது.? அதனை பரிசோதனை செய்த அதிகாரிகள் யார்? என கேட்கிறோம்.
இவ்வாறு பல குற்றச்சாட்டுக்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் அவை தொடர்பில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. அவைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதில்லை.
ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மாத்திரம் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகிறது. இதுதானா அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்த வெளிப்படைத்தன்மை. கடந்த கால அரசாங்கங்களும் இவ்வாறுதான் செயற்பட்டு வந்தன. அதனையே தற்போதுள்ள அரசாங்கமும் கடைப்பித்து வருகிறது.
அதனால் அரசாங்கம் கடந்த அரசாங்கங்கள் செயற்பட்ட முறையில் பயணிக்க ஆரம்பித்தால், நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் ஒன்று இந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் எழும். அப்போது இந்த அரசாங்கத்துக்கும் ஓடவேண்டி வரும் என்றார்.
No comments:
Post a Comment