(இராஜதுரை ஹஷான்)
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து படுகொலைகளை நிறுத்திய மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஏன் பழிவாங்க முயற்சிக்கிறது. பழிவாங்கும் எண்ணத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.
தங்காலை கால்டன் இல்லத்துக்கு புதன்கிழமை (17) சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவானவுடன் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை என் நெருங்கிய நண்பராகவே உள்ளார். அவரது சகல அரசியல் பயணத்திலும் நான் இருந்துள்ளேன்.
அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அவரை வெளியேற்றியதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காகவே தங்காலைக்கு வந்தேன். இவரை நாம் அனைவரும் மதிக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்கள் விடுதலை முன்னணியினர் இளைஞர்களை படுகொலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இருந்து கதிர்காமத்துக்கு பேரணியாகவே சென்றார். இன்று மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் அவரை பழிவாங்கியுள்ளது.
இறுதி காலத்தில் இவர்களை நிம்மதியாக இருக்கவிட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொண்டது. அவர் தன்னை பறி கொடுத்தார். தற்போது அவர் உடல்நிலை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரையும் வீட்டை விட்டு அரசாங்கம் வெளியேற்றியுள்ளது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து படுகொலைகளை நிறுத்திய மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஏன் பழிவாங்க முயற்சிக்கிறது. பழிவாங்கும் எண்ணத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment