சிறுவர்களுக்கு தனியான சாட்சி அறைகள் நாடு முழுவதும் அமைக்கப்படும் - நீதி அமைச்சர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 18, 2025

சிறுவர்களுக்கு தனியான சாட்சி அறைகள் நாடு முழுவதும் அமைக்கப்படும் - நீதி அமைச்சர் தெரிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள் பாதுகாப்பான முறையில் சாட்சி வழங்குவதற்காக நாடு பூராகவும் உள்ள நீதிமன்றங்களில் தனியான சாட்சி அறைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோமென நீதிஅமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தாா்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு, சிறுவர், மகளிர் விவகார அமைச்சு மற்றும் யுனிசெப் நிறுவனம் இணைந்து முன்னெடுத்த, வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சேவைகளை ஒழுங்குபடுத்தும் செயல்முறையின் ஆரம்ப நிகழ்வு நேற்று (17) கண்டியில் இடம்பெற்றது.

இதன் ஓர் அங்கமாக பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள் பாதுகாப்பான முறையில் சாட்சி வழங்க முடியுமான டிஜிட்டல் வசதிகள் உடைய சாட்சி அறை ஒன்றை கண்டி மேல் நீதிமன்றத்தில் திறந்துவைக்கும் நிகழ்வுக்கு நிகழ்நிலையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களுக்கு பாதுகாப்பாக சாட்சி வழங்குவதற்காக நீதிமன்றத்தில் சாட்சி அறை அமைப்பது இந்த நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பின் திருப்புமுனையாகும். பாதிக்கப்பட்ட நிலையில் சட்டத்துக்கு முன்னால்வரும் சிறுவர்களுக்கு பாதுகாப்பாக சாட்சி வழங்க முடியுமாக இருக்க வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான முறையில் சாட்சி வழங்க முடியுமான டிஜிட்டல் வசதியுடனான சாட்சி அறை ஒன்று கண்டி மேல் நீதிமன்றத்துக்குள் திறந்து வைக்கப்படுவது இந்த நாட்டின் முதல் தடவையாகும்.
அதனால் நாடு பூராகவும் உள்ள நீதிமன்றங்களில் இந்த வசதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அதற்காக வசதிகளை வழங்கிய ஐராேப்பிய சங்கம். யுனிசெப் நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடொன்றை உரித்தாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அதேநேரம் சிறுவர் பாதுகாப்புக்காக பலமான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

ஏதாவது ஒரு சம்பவம் ஒன்று பாெலிஸுக்கு, ஆதரவு நிலையங்களுக்கு அல்லது வேறு நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து, வன்முறைக்கு முகம்கொடுத்த சிறுவர்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பான பொறிமுறை ஒன்றுடன் சம்பந்தப்படும் வரை விரைவாக மற்றும் சிறுவர்களுக்கு ஏற்ற ஆதரவை பெற்றுக் கொடுப்பதே இந்த முறையான செயற்பாடுகளின் நோக்கமாகும்.

இந்த வசதிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களாக மாறும் சிறுவர்களுக்கு நீதிமன்ற சூழலில் இருந்து தனியான அறையில் இருந்து சாட்சி வழங்குவதற்கு இடம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சிறுவர்களுக்கு குற்றவாளிகளுடன் நேருக்குநேர் சந்திக்காமல் இருப்பதன் மூலம் அந்த பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் சிறுவனுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்ற அதிர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.

எனவே வன்முறைக்கு ஆளாகியுள்ள சிறுவர்களுக்காக இந்த சேவைகளை அறிமுகப்படுத்தல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொடுண்டுவருதல் தொடர்பில் 2024 பொகோட்டா மாநாட்டில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும் என்றாகும்.

No comments:

Post a Comment