(எம்.மனோசித்ரா)
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகராவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதே சட்டத்தையே வரையறுக்கப்பட்ட சில திருத்தங்களுடன் இந்த அரசாங்கமும் சமர்ப்பித்திருக்கிறது. பலவந்தமாக இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள சுயவிருப்பில் சேவையிலிருந்து விலகுவதற்கான தெரிவிற்கு இணங்க வேண்டாம் என்று மின்சார சபை ஊழியர்களைக் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மின்சார சபையிலுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தலையிட்டு தீர்வினை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதியின் உரையிலிருந்து அந்த எதிர்பார்ப்பும் பிரயோசனமற்றது என்பது தெளிவாகியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தலைவராக ஜனாதிபதி பொறுப்புடன் பேசியிருக்க வேண்டும். மாறாக நிறைவேற்றதிகாரத்தின் உச்சத்திலுள்ள அவர் மின்சார சபை ஊழியர்களை மறுசீரமைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் சேவையிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கூறுகின்றார்.
ஊழியர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காது, அவர்களுடன் கலந்தாலோசிக்காது மறுசீரமைப்பினை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தில் மின்சார சபை மறுசீரமைப்பிற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டது. அந்த சட்ட மூலத்தை இரத்து செய்து பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகராவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதே சட்டத்தையே வரையறுக்கப்பட்ட சில திருத்தங்களுடன் இந்த அரசாங்கமும் சமர்ப்பித்திருக்கிறது.
அது மாத்திரமின்றி பலவந்தமாக இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது. எவ்வாறிருப்பினும் இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றும், அரசாங்கம் பரிந்துரைத்துள்ள சேவையிலிருந்து விலகுவதற்கான தெரிவுக்கு இணங்க வேண்டாம் என்றும் மின்சார சபை ஊழியர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
காரணம் இந்த அரசாங்கம் நிரந்தரமானதல்ல. எனவே இந்த அரசாங்கத்தின் கீழ் உங்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால், எமது ஆட்சியில் அவை நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதியளிக்கின்றோம்.
இந்த புதிய சட்டத்துக்கமைய மின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பவை தனியார் மயப்படுத்தப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது குறித்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் 19ஆவது பக்கத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பினை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் பிரஜைகள் மற்றும் ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தனியார் முதலீடுகள் வரவேற்கப்பட வேண்டும். ஆனால் அதேவேளை தேசிய சொத்துக்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment