இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறிவரும் சூழலில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 65,000 ஐ தாண்டியுள்ளது.
சர்வதேச அளவில் கடும் கண்டனங்களுக்கு மத்தியில் காசா நகரில் தரை வழிப்படை நடவடிக்கையை ஆரம்பித்திருக்கும் இஸ்ரேலிய படை நகரில் இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
பல டஸின் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் காசாவின் பிரதான குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாக உள்ளூர் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
டாங்கிகள், புல்டோசர்கள் மற்றும் கவச வாகனங்கள் காசா நகரின் வடக்கே உள்ள ஷெய்க் ரத்வான் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த முன்னேற்றத்தை பாதுகாக்கும் வகையில் இஸ்ரேலியப் படை பீரங்கி குண்டுகள் மற்றும் புகை குண்டுகளை வீசி அடர்ந்த புகைக்கு மத்தியில் முன்னேற ஆரம்பித்துள்ளன.
ஷெய்க் ரத்வான் பகுதியில் போருக்கு முன்னர் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வசித்து வந்தனர். இந்த பகுதி காசா நகரில் அதிக சனநெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றாக கருதப்பட்டு வந்தது.
காசா நகரை ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டை என இஸ்ரேல் வர்ணித்துள்ளது. இங்குள்ள 3,000 வரையிலான ஹமாஸ் போராளிகளை தோற்கடிப்பது மற்றும் பணயக் கைதிகளை விடுப்பதற்கே படை நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
சிறுவர்களை பாதுகாப்போம் மற்றும் ஒக்ஸ்பாம் உட்பட 20 இற்கும் அதிகமான பிரதான உதவி நிறுவனங்கள், ‘காசாவில் நிலவும் மனிதாபிமானமற்ற நிலை மனசாட்சிக்கு விரோதமானது’ என்று எச்சரித்துள்ளன.
கட்டடங்கள், பிரதான வீதிகளை இலக்கு வைத்து கடுமையான தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்தே இஸ்ரேலிய படைகள் முன்னேற ஆரம்பித்திருப்பதாக ஷெய்க் ரத்வான் குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர்.
தனது குடுபத்துடன் தெற்கை நோக்கி வெளியேறிய சாத் ஹமாத் என்பவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு கடந்த புதனன்று (17) கூறியதாவது, ‘ஆளில்லா விமானங்கள் ஒன்றையும் விட்டுவைப்பதில்லை. அவை சூரிய பனல்கள், மின் பிறப்பாக்கிகள், தண்ணீர் தொட்டிகள், இணையதள வலையமைப்புகளைக் கூட தாக்கி அழிக்கின்றன’ என்றார்.
‘அங்கே வாழ்வது சாத்தியமற்றது, அதனாலேயே மக்கள் ஆபத்துக்கு மத்தியிலும் வெளியேறி வருகிறார்கள்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஷெய் ரத்வானில் அபூ இஸ்கந்தர், அல்-தவாம், அல்-சப்தாவி பகுதிகள் உள்ளடங்குகின்றன. அங்கிருந்து செல்லும் அல்-ஜலா வீதி, காசா நகர மையப் பகுதியையும் வடக்கு பகுதிகளையும் இணைக்கும் முக்கியமான பாதையாக உள்ளது.
இந்தப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றினால் படையினர் நகருக்குள் ஆழ ஊடுருவுவதற்கும் நகரின் மையப் பகுதியை அடைவதற்கும் பாதை திறக்கும் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய டாங்கிகள் நகருக்குள் தென்படுவது அங்கு தொடர்ந்து தங்கி இருக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நகரின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இருப்பவர்கள் இடையே பயத்தை உருவாக்கியுள்ளது.
இந்த டாங்கிகள் தென்படுவது முன்னர் இஸ்ரேலிய படை ஆக்கிரமித்தபோதும் ஒட்டுமொத்த குடியிருப்பும் தரைமட்டமாக்கப்பட்டதை ஞாபகப்படுத்துவதாக உள்ளது என்று பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளூர் குடியிருப்பாளரான வாஹித் அபூ ரமதான் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது, ‘கடும் இருளிலும், குண்டு மற்றும் கூச்சல் சதங்களுக்கு மத்தியிலுமே நாம் இரவை கழித்தோம். விடிந்ததும் எல்லா பக்கங்களிலும் டாங்கிகளை பார்க்க முடிந்ததோடு மூச்சு விட முடியாத அளவுக்கு புகை சூழ்ந்திருந்தது. எமது அண்டை வீட்டார்கள் அனைவரும் வெளியேறிச் சென்றுவிட்டார்கள். அந்த வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன’ என்றார்.
இஸ்ரேலிய டாங்கிகளின் முன்னேற்றத்தை அடுத்து காசா நகரில் இருந்து தப்பிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. உடைமைகளை ஏற்றிய கார்கள் மற்றும் வண்டிகள் தெற்கை நோக்கி சலாஹதின் பாதை வழியாக வீதி நெடுக வரிசையில் செல்கின்றன. இந்த அபாயகரமான பயணத்தில் பெரும் தொகை பணம் செலவாவதோடு பல மணி நேரம் பயணிக்க வேண்டி இருப்பதாக குறியிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காசாவில் இடம்பெற்றுவரும் சரமாரி தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டி 65,141 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்றுக் காலை தொடக்கம் இடம்பெற்று வந்த தாக்குதல்களில் 40 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment