ஆசிய கிண்ணம் இன்று ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 8, 2025

ஆசிய கிண்ணம் இன்று ஆரம்பம்

எட்டு அணிகளின் பங்கேற்புடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (09) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

இன்று முதல் நாள் போட்டியில் பி குழுவுக்காக ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதவுள்ளன.

ரி20 உலகக் கிண்ண தொடர் நெருங்கியுள்ளதால் 17 ஆவது ஆசிய கிண்ணத் தொடரும் ரி20 வடிவிலேயே நடைபெறவுள்ளது. 

இதில் எட்டு அணிகளும் தலா நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு ஆரம்ப சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடம்பெற்றிருப்பதோடு பி குழுவில் இலங்கையுடன் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகள் இடம்பெற்றுள்ளன. குழுநிலையில் ஒரு அணி மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும்.

இதில் இலங்கை அணி தனது குழுநிலை போட்டிளில் செப்டெம்பர் 13 ஆம் திகதி பங்களாதேஷ் அணியையும் செப்டெம்பர் 15 மற்றும் 18 ஆம் திகதிகளில் முறையே ஹொங்கொங் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளையும் எதிர்கொள்ளவுள்ளன. 

அதேபோன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஏ குழு போட்டி டுபாயில் செப்டெம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அனைத்துப் போட்டிகளும் டுபாய் மற்றும் அபூதாபியில் நடைபெறவுள்ளதோடு போட்டிகள் இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.

ஆரம்ப சுற்று போட்டிகளில் இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் போர் சுற்றுக்கு முன்னேறுவதோடு, சுப்பர் போர் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற தணியுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டெம்பர் 28 ஆம் திகதி டுபாயில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

ரி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆசிய கிண்ண நடப்புச் சம்பியனாகவே இந்தத் தொடரில் களமிறங்குகிறது. எனவே அந்த அணி இந்தத் தொடரிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலும்.

இலங்கை அணி சிம்பாப்வேயுக்கு எதிரான ரி20 தொடரை கைப்பற்றிய கையோடு ஐக்கிய அரபு இராச்சியத்தை சென்றடைந்துள்ளது. கடைசியாக ஆசிய கிண்ணம் ரி20 வடிவில் நடைபெற்றபோதும் இலங்கை அணியே கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அணியின் ஆரம்ப வரிசை பலமாக இருப்பதோடு மத்திய வரிசையில் தசுன் ஷானக்க, அணித் தலைவர் சரித் அசலங்க போன்ற அனுபவ வீரர்கள் இருப்பது நம்பிக்கை தருவதாக உள்ளது காயத்தின் பின் வனிந்து ஹசரங்க அணிக்கு திரும்பி இருப்பது வலுச் சேர்க்கும்.

மறுபுறம் சல்மான் அகா தலைமையிலான இளம் அணி ஒன்றுடன் களமிறங்கும் பாகிஸ்தான் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற முக்கோண தொடரை வென்ற கையோடு ஆசிய கிண்ணத்தில் ஆடவுள்ளது. அணியில் அனுபவம் அற்ற வீரர்கள் அதிகம் இருந்தபோதும் ஓரளவு சமபலமான அணியுடனேயே பாகிஸ்தான் ஆடவுள்ளது.

ஆப்கான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் சவால் கொடுக்கக் கூடியவை என்பதால் சுப்பர் போர் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இலங்கை அணிக்கு தீர்க்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment