குருக்கள் மடத்தில் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல் சேகரிப்பு : காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Monday, September 1, 2025

குருக்கள் மடத்தில் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல் சேகரிப்பு : காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் நிகழ்வு

பாறுக் ஷிஹான்

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெற்றது.

1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் புதைக்கப்பட்டதாக கருதப்படும் மனிதப் புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் வழங்கியதையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குரல்கள் அமைப்பு மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை, வழக்கின் முறைப்பாட்டாளர் அப்துல் மஜீத் அப்துர் ரஊப் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி புனித ஹஜ் கடமையை முடித்துக் கொண்டும், கல்முனை பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைக்காகவும் சென்று காத்தான்குடிக்கு திரும்பி வரும்போது அவர்கள் கடத்தப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் ஆவணங்களுடன் வந்து தகவல்களை வழங்கினர்.

இந்த சம்பவத்தில் கடத்தி காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு குருக்கள் மடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் மனிதப் புதைகுழியை தோண்டி இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத் அப்துர் ரஊப் என்பவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், குருக்கள் மடம் மனிதப் புதைகுழியை தோண்டுவதற்கு கட்டளையை கடந்த ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment