இஸ்ரேலின் காசா மீதான போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான வெள்ளை மாளிகை 20 அம்சங்களைக் கொண்ட போர் நிறுத்த சமாதான உடன்படிக்கை திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.
இரு தரப்பினரும் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டால், உடனடியாக போர் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு எழுத்துபூர்வமான சமாதானத் திட்டம் எதுவும் கிடைக்கவில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் 66,000 இற்கும் அதிகமான பலஸ்தீனியர்களின் உயிர்களைக் காவுகொண்டு, பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ள இப்போரை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் முன்வைத்த முழுமையான 20 அம்சத் திட்டம் வருமாறு:
ட்ரம்பின் 20 அம்ச சமாதானத் திட்டம்
01. பயங்கரவாதம் இல்லாத காசா
காசா தனது அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத, தீவிரமயமாக்கல் நீக்கப்பட்ட பிரதேசமாக இருக்க வேண்டும்.
02. மக்களுக்கான புனரமைப்பு நடவடிக்கை
காசா மக்கள் படும் துயரங்களை முடிவுக்கு கொண்டுவர, காசா அதன் மக்களுக்காக புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.
03. உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேலிய படைகள் பின்வாங்கல்
இந்தத் திட்டத்திற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், போர் உடனடியாக முடிவுக்குவரும். பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் வகையில், ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக்கோடு வரை இஸ்ரேலிய படைகள் பின்வாங்கும். இந்தப் பிணைக் கைதிகள் மீட்புப் பணிகளின்போது, வான் வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் உட்பட அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும்.
04. பணயக் கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேல் இத்திட்டத்தை பகிரங்கமாக ஏற்றுக் கொண்ட 72 மணி நேரத்திற்குள், காசாவிலுள்ள உயிருடன் மற்றும் இறந்த நிலையில் உள்ள அனைத்து பணயக் கைதிகளும் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.
05. பலஸ்தீன கைதிகளின் விடுதலை
அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின்னர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 250 கைதிகள் மற்றும் 2023 ஒக்டோபர் 07ஆம் திகதிக்கு பின்னர் தடுத்து வைக்கப்பட்ட அனைத்து பெண்களும் சிறுவர்களும் உட்பட 1,700 காசா கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும். தலா இஸ்ரேலிய பணயக் கைதி ஒருவரின் உடல் எச்சங்கள் விடுவிக்கப்படுவதற்கு ஈடாக, உயிரிழந்த 15 காசா மக்களின் உடல் எச்சங்களை இஸ்ரேல் விடுவிக்கும்.
06. ஹமாஸுக்குப் பொதுமன்னிப்பு
அனைத்து பிணையக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதன் பின்னர், சமாதான சகவாழ்வுக்கு உறுதியளித்து, தமது ஆயுதங்களை நிரந்தரமாக ஒப்படைக்கும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும்.
பாதுகாப்பான வெளியேற்றம்
காசாவை விட்டு வெளியேற விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு அவர்களை ஏற்கும் நாடுகளுக்கான பாதுகாப்பான வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
07. உடனடி மனிதாபிமான உதவி
உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டவுடன், உட்கட்டமைப்பு புனரமைப்பு (நீர், மின்சாரம், வடிகால்), வைத்தியசாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஜனவரி 19, 2025 உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட அளவில் முழுமையான உதவிகள் உடனடியாக காசாவுக்கு அனுப்பப்படும். இடிபாடுகளை அகற்றவும், வீதிகளை திறக்கவும் உபகரணங்கள் அனுப்பப்படும்.
08. உதவி விநியோகப் பொறிமுறை, ரபா எல்லைத் திறப்பு
ஐ.நா, செம்பிறைச் சங்கம் மற்றும் இரு தரப்புடனும் தொடர்பில்லாத சர்வதேச நிறுவனங்கள் மூலமாக உதவிப் பொருட்கள் விநியோகம் எந்தத் தடையுமின்றி நடைபெறும். ரபா எல்லைக் கடப்பு, ஜனவரி 19, 2025 உடன்படிக்கையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே பொறிமுறையின் கீழ் இரு திசைகளிலும் திறக்கப்படும்.
09. தொழில்நுட்ப வல்லுநர் ஆட்சி, சமாதான சபை
காசாவில், அன்றாட பொதுச் சேவைகளை வழங்க பொறுப்பான ஒரு தற்காலிக, தொழில்நுட்ப வல்லுநர் கொண்ட (technocratic), அரசியலற்ற பலஸ்தீனியக் குழுவின் கீழ் நிர்வகிக்கப்படும். இந்தக் குழுவை மேற்பார்வையிட, முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் உட்பட, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் புதிய சர்வதேச இடைக்கால அமைப்பான “சமாதான சபை” (Board of Peace) உருவாக்கப்படும். பலஸ்தீன நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, அது 2020 ஜனாதிபதி ட்ரம்பின் அமைதித் திட்டம் மற்றும் சவூதி-பிரெஞ்சு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி தமது சீர்திருத்தத் திட்டத்தை முடிக்கும் வரை, காசாவின் மறுசீரமைப்புக்கான கட்டமைப்பை இந்த அமைப்பு அமைத்து புனரமைப்புக்கான நிதியை அது கையாளும். மேலும் காசாவின் கட்டுப்பாட்டை பாதுகாப்பாகவும் திறம்படவும் மீளப் பெறும் வரை. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் காசா மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய நவீன மற்றும் திறமையான நிர்வாகத்தை உருவாக்க இந்த சபை சர்வதேச தரங்களைப் பயன்படுத்தும்.
10. பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
காசாவைப் புனரமைக்க மற்றும் மேம்படுத்த, ட்ரம்பின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, நிபுணர்களைக் கொண்ட குழு உருவாக்கப்படும். சிந்தனைமிக்க முதலீட்டுத் திட்டங்களும், உற்சாகமான மேம்பாட்டு யோசனைகளும் நல்லெண்ணம் கொண்ட சர்வதேச குழுக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் எதிர்கால காசாவிற்கு வேலைகள், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் இந்த முதலீடுகளை ஈர்ப்பதற்கும் எளிதாக்குவதற்கும் பாதுகாப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக இவை பரிசீலிக்கப்படும்.
11. விசேட பொருளாதார வலயம்
பங்குபெறும் நாடுகளுடன் சலுகை கட்டணங்கள் மற்றும் அணுகல் விகிதங்களுடன் கூடிய விசேட பொருளாதார வலயம் (Special Economic Zone) நிறுவப்படும்.
12. வாழ்வதற்கான உறுதி நிலை
யாரும் காசாவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள்; வெளியேற விரும்புவோர் சுதந்திரமாகச் செல்லவும் மீளத் திரும்பவும் முடியும்; ஆனால் அங்கேயே தங்கி காசாவை கட்டியெழுப்ப ஊக்குவிக்கப்படுவார்கள்.
13. ஹமாஸ் நீக்கம், இராணுவமயமாக்கல்
ஹமாஸ் மற்றும் அதனுடன் சார்ந்த ஏனைய பிரிவினர் காசாவின் நிர்வாகத்தில் எந்தப் பங்கும் வகிக்க மாட்டார்கள். சுரங்கப்பாதைகள் மற்றும் ஆயுத உற்பத்தி வசதிகள் உட்பட அனைத்து இராணுவ மற்றும் பயங்கரவாத உட்கட்டமைப்புகளும் அழிக்கப்படுவதோடு, மீண்டும் அது ஏற்படுத்தப்படமாட்டாது.
14. பிராந்திய பங்காளிகளின் உத்தரவாதம்
ஹமாஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவினர் மேற்படி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதையும், புதிய காசா அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது அதன் மக்களுக்கோ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதையும் உறுதி செய்வதற்கு பிராந்திய பங்காளிகளால் ஒரு உத்தரவாதம் வழங்கப்படுதல்.
15. சர்வதேச ஸ்திரப்படுத்தல் படை (International Stabilization Force: ISF) உருவாக்கம், இஸ்ரேலியப் படைகள் வெளியேற்றம்
அமெரிக்கா மற்றும் சர்வதேசப் பங்காளிகள் இணைந்து, பலஸ்தீனியப் பொலிஸ் படைகளுக்கு ஆதரவளிக்க ஒரு தற்காலிக சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையை (ISF) உருவாக்கி உடனடியாகக் காசாவில் நிலைநிறுத்தும். மேலும் இந்தத் துறையில் விரிவான அனுபவமுள்ள ஜோர்டான் மற்றும் எகிப்துடன் கலந்தாலோசிக்கும். இந்தப் படை நீண்டகால உள்நாட்டுப் பாதுகாப்புக்கான தீர்வாக இருக்கும். எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க இஸ்ரேல் மற்றும் எகிப்துடனும், புதிதாகப் பயிற்சி பெற்ற பலஸ்தீன பொலிஸ் படைகளுடனும் இணைந்து செயல்படும். காசாவுக்குள் வெடிமருந்துகள் நுழைவதைத் தடுப்பதும், காசாவை மீண்டும் கட்டியெழுப்பவும் புத்துயிர் பெறவும் பொருட்களின் விரைவான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றத்தை எளிதாக்குவதும் மிக முக்கியம். மோதல் நீக்க வழிமுறையை இரு தரப்புகளும் ஒப்புக் கொள்ளும்.
16. காசாவை ஆக்கிரமிக்காது
இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்கவோ அல்லது அதனுடன் இணைத்துக்கொள்ளவோ மாட்டாது. ISF கட்டுப்பாட்டை நிலைநாட்டியவுடன், இராணுவமயமாக்கல் குறித்த அடைவுகளின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் படிப்படியாகவும் தொடர்ந்து முழுமையாகவும் காசாவில் இருந்து வாபஸ் பெறும். எனினும், மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படாதவாறு ஒரு பாதுகாப்புச் சுற்றளவை (Security Perimeter) அது தக்க வைத்துக் கொள்ளும். பலஸ்தீனிய சுயநிர்ணயத்திற்கான அரசியல் வழியை உருவாக்க அமெரிக்கா உரையாடலை மேற்கொள்ளும்.
17. நிராகரித்தால் மாற்று திட்டம்
ஹமாஸ் இந்தத் திட்டத்தைத் தாமதப்படுத்தினாலோ அல்லது நிராகரித்தாலோ, அதிகரிக்கப்பட்ட உதவி நடவடிக்கைகள் உட்பட மேலே கூறப்பட்டவை, இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து (IDF) சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையிடம் (ISF) ஒப்படைக்கப்பட்ட பயங்கரவாதம் அற்ற பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும்.
18. மதங்களுக்கிடையே உரையாடல்
சகிப்புத்தன்மை மற்றும் சமாதான சகவாழ்வின் மதிப்புகளின் அடிப்படையில், அமைதியால் பெறக்கூடிய நன்மைகளை வலியுறுத்தி, பலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனநிலைகளையும், கதையாடல்களையும் மாற்றியமைக்கும் நோக்குடன், மதங்களுக்கிடையேயான உரையாடல் செயன்முறை (Interfaith Dialogue) நிறுவப்படும்.
19. பலஸ்தீன் சுயநிர்ணயம்
காசாவின் புனரமைப்பு முன்னேற்றமடைந்து, பலஸ்தீனிய நிர்வாகத்தின் (PA) சீர்திருத்தத் திட்டம் நம்பகத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும்போது, பலஸ்தீனிய மக்களின் அபிலாஷையாக நாம் அங்கீகரிக்கும் பலஸ்தீனிய சுயநிர்ணயம் மற்றும் அரசியலமைப்பிற்கான நம்பகமான பாதையானது இறுதியாக உருவாகலாம்.
20. அரசியல் எல்லை
அமைதியான மற்றும் வளமான சகவாழ்வுக்கான ஒரு அரசியல் எல்லையை (Political Horizon) ஒப்புக்கொள்வதற்காக, இஸ்ரேலுக்கும் பலஸ்தீனியர்களுக்கும் இடையில் அமெரிக்கா ஒரு உரையாடலை முன்னெடுக்கும்.
No comments:
Post a Comment