(எம்.மனோசித்ரா)
பதுளை, எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய பஸ், 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் வழித்தட அனுமதி இரத்து செய்யப்பட்டிருந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பஸ்களை ஒழுங்குபடுத்துவதற்கு எவ்வித சட்டங்களும் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
குறித்த வீதியில் விபத்துகளைக் குறைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் மேலும் தெளிவுபடுத்துகையில், தனியார் பஸ்களில் மாகாணத்துக்குள் மாத்திரம் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளன. அந்த பேருந்துகள் மாகாண போக்குவரத்து அதிகார சபையிலேயே பதிவு செய்யப்படும்.
மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டு வழித்தட அனுமதியைப் பெற வேண்டும். குறித்த விபத்துக்குள்ளான பஸ் 2023 இல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிலிருந்து பதிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வேறு பஸ் ஒன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பழைய பஸ் என்பதால் வீட்டில் வைத்திருந்து, அதைப் புதுப்பித்து சுற்றுலா செல்வதற்கு மாத்திரம் பயன்படுத்தியிருக்கின்றனர். அந்த வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த பஸ் விதிமுறைகளுக்கு உட்படவில்லை.
வருடாந்தம் வாகன அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு மாத்திரமே இந்த பஸ் சென்றிருக்க வாய்ப்புள்ளது. எவ்வாறிருப்பினும் இவ்வாறு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போதும் அதன் நிலைமை ஆராயப்பட்டிருக்கவில்லை என்றார். இந்நிலையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த குழு, பஸ்ஸை பார்வையிட விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.
மேலும், தேசிய போக்குவரத்து இரசாயன பகுப்பாய்வு நிறுவனம் மற்றும் போக்குவரத்து அமைச்சின் வீதி பாதுகாப்பு திட்டத்தின் அதிகாரிகள் குழுவொன்று சனிக்கிழமை (06) அப்பகுதியில் மேலதிக ஆய்வுகளை நடத்தி உள்ளனர்.
தங்காலையிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 12 பேர் தங்காலை நகர சபையில் பணிபுரிபவர்களாவர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் தங்காலை நகர சபை செயலாளரும் உள்ளடங்குகின்றார்.
இவர்களில் 10 பேரின் சடலங்கள் நேற்று தங்காலை நகர சபை மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன. உயிரிழந்தவர்களின் உறவினர்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் நூற்றுக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தங்காலை நகர சபையில் திரண்டிருந்தனர்.
பிரதமரும் நேரில் சென்று அஞ்சலி
பிரதமர் ஹரிணி அமரசூரியவும் தங்காலை நகர சபைக்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். பிரதமருடன் மேலும் சில அரசியல்வாதிகளும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவர்களுக்கான இறுதி மத சடங்குகளிலும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த விபத்தால் முழு நாடும் சோகத்திலுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மீண்டுமொருமுறை இடம்பெற இடமளிக்க முடியாது. இவை தற்செயலாக இடம்பெறுபவை அல்ல. தவிர்க்கக் கூடியவை. எம்மால் சட்டத்தை உருவாக்க முடியும். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு ஒவ்வொருவரதும் ஒத்துழைப்பும் அவசியமாகும் என்றார்.
வைத்தியசாலைகளில் காயமடைந்தோர்
விபத்தில் காயமடைந்த 17 பேர் மற்றும் அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டபோது காயமடைந்த மேலும் இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பில் பதுளை வைத்தியசாலை வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவிக்கையில், காயமடைந்தவர்களில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களுக்கு அவை முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. சிலருக்கு முக்கிய சத்திர சிகிச்சைகள் சற்று காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. ஏனைய காயங்கள் ஆறும் வரை அவற்றை மேற்கொள்ள முடியாது. எனினும் அவர்களது உடல் நலன் நாளுக்குநாள் சரியாகி வருகின்றன.
சிலர் ஓரிரு நாட்களில் வீடுகளுக்கு செல்லக்கூடிய நிலைமையிலுள்ளனர். இவர்களுக்கு விபத்து இடம்பெற்ற இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டமையால் உயிர் ஆபத்து ஏற்படாமல் தடுக்க முடிந்துள்ளது.
இரசாயன பரிசோதனை
துண்டுகளாக சிதைந்திருந்த பஸ் சனிக்கிழமை அதிகாலை மேலெடுக்கப்பட்டு எல்ல பொலிஸ் நிலையத்துக் கொண்டுவரப்பட்டது. அவை திங்கட்கிழமை (08) அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
விபத்து குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளில் பஸ்ஸில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் விபத்துக்குள்ளான பஸ்ஸை ஆய்வு செய்து, கண்டறிதலை உறுதிப்படுத்தும் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment