2014ஆம் ஆண்டு முதல் 2022 வரை இலங்கை மின்சார சபையின் நஷ்டம் ரூ. 594,368 மில்லியன் : பங்குகளை பிரிக்கும் விதம் தெளிவாக இல்லாததால் மறுசீரமைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் : பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடனை அடைக்காமையே மின் தடைக்கு காரணம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 29, 2025

2014ஆம் ஆண்டு முதல் 2022 வரை இலங்கை மின்சார சபையின் நஷ்டம் ரூ. 594,368 மில்லியன் : பங்குகளை பிரிக்கும் விதம் தெளிவாக இல்லாததால் மறுசீரமைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் : பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடனை அடைக்காமையே மின் தடைக்கு காரணம்

2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் ரூ.594,368 மில்லியன் என்பது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்தது.

இலங்கை மின்சார சபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அதன் தலைவர் தலைமையில் அண்மையில் (24) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரியவந்தது.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நஷ்டத்திற்குப் பல காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழு, நிறுவனத்தில் ஊழியர்கள் இருக்கும்போது சபையின் சில செயற்பாடுகள் வெளித்தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது. 

இதுபோன்ற தொடர்ச்சியான நஷ்டங்கள் காணரமாக 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணங்கள் அதிக அளவில் அதிகரித்ததாகவும், இதன் காரணமாக மக்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இருப்பினும், 2023 க்குப் பின்னர் மின்சாரசபை இலாமபீட்டும் நிலைக்குச் சென்றது என்பதும் இங்கு தெரியவந்தது.

கடந்த காலத்தில் சுமார் 18 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டதற்கு கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணம் அல்ல என்றும், மாறாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்த வேண்டிய கடன் செலுத்த முடியாமையே காரணம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 

2014 ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணம் போதுமானளவு திருத்தத்திற்கு உள்ளாகாமையால், திடீரென மின் கட்டணத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்றும் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

இதன் காரணமாக மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எல்.ரி.எல் நிறுவனத்தின் பங்குகள் பிரிக்கப்பட்ட விதம் தெளிவாக இல்லை என்றும், இந்த நிறுவனத்தை மறுசீரமைக்கும் போது இது மேலும் சிக்கலாக அமையலாம் என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

எல்.ரி.எல். நிறுவனம் (லங்கா ட்ரான்ஃபோமர் நிறுவனம்), வெஸ்ட் கோஸ்ட் நிறுவனம் மற்றும் ஈசொட் (Esot) நிறுவனம் ஆகிய நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செயல்பாடு குறித்து சிக்கல்கள் இருப்பதாக தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

இந்த நிறுவனத்தின் பங்குப் பிரிப்புக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் மிகவும் தெளிவற்றதாக இருப்பதாகக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

எனவே, சட்டப் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குழு தெிவித்தது. அத்துடன் ஒக்டோபர் 24ஆம் திகதி எல்.ரி.எல். நிறுவனத்தை கோப் குழுவிற்கு அழைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

புத்தளம் அனல்மின்நிலையத் திட்டத்திற்காக ரூ. 124.30 மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 6 வாகனங்களை ஒப்பந்ததாரர் இன்னும் வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது. 

தொடர்புடைய ஒப்பந்தத்தின்படி, திட்டம் முடிந்த பிறகு இந்த வாகனங்கள் மின்சார சபையிடம் ஒப்படைக்கப்படவிருந்த போதும், அவை இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், பொதுச் சொத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது

மேலும், இலங்கை மின்சாரசபை ஊழியர் சேமலாப நிதிய விதிகளுக்கு முரணாக ரூ.64 மில்லியன் கல்விக் கடன் மற்றும் ரூ.6,618.3 மில்லியன் சொத்துக் கடன்களாக 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருப்பதாகவும் புலனானது. 

இந்தக் கடன்கள் பணிப்பாளர் சபை, தொழிலாளர் ஆணையாளர் மற்றும் உள்நாட்டரசிறை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் 2003 ஆம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதி விதிமுறைகளைத் திருத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாமல் இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 11 மாதங்களாக பதில் உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவர் பணியாற்றி வருகின்றமை குறித்தும் கோப் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இலங்கை மின்சார சபையில் குறிப்பாக அதிக அளவு பணம் புழக்கத்தில் உள்ள ஒரு நிறுவனமாக, நிரந்தர உள்ளகக் கணக்காய்வாளர் இல்லாதது வருந்தத்தக்கது என்று குழு சுட்டிக்காட்டியது. இந்தப் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள் எதிர்காலத்தில் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அனுமதி இல்லாமல் வழங்கப்பட்ட பல கொடுப்பனவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. பதவியணி ஆணைக்குழு மற்றும் பொதுநிர்வாக சேவை ஆணைக்குழு ஆகியவற்றின் ஒப்புதல் இல்லாமல் 2008 ஏப்ரல் 09 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளின் பட்டியலில் சேர்க்கப்படாத கொடுப்பனவுகளுக்காக 2023 ஆம் ஆண்டில் ரூ. 507.47 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. 

தொழில்முறை கொடுப்பனவைப் பெற உரிமையுள்ள அதிகாரிகளுக்கு தக்கவைப்பு கொடுப்பனவு வழங்கப்படக்கூடாது என்றாலும், தொழில்முறை கொடுப்பனவைப் பெற உரிமையுள்ள 517 அதிகாரிகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தக்கவைப்பு கொடுப்பனவாக ரூ. 99.85 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க குழு பரிந்துரைகளையும் வழங்கியது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான், சுஜீவ சேனசிங்க, அசித நிரோஷன எகொட விதான, சந்திம ஹெட்டியாராச்சி, சட்டத்தரணி நிலாந்தி கொட்டஹச்சி, ருவன் மாபலகம, எம்.கே.எம். அஸ்லம், திலின சமரகோன், ஜகத் மனுவர்ண, தர்மப்பிரிய விஜேசிங்க, தினேஷ் ஹேமந்த, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment