2025 ஆம் கல்வி ஆண்டிற்கான க.பொ.த. சாதரண தரப்பரீட்சையும் 1447 ஆம் ஹிஜ்ரி வருடத்திற்கான புனித ரமழான் நோன்பும் ஒரே தினத்தில் ஆரம்பமாகின்றன. இது, பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும். எனவே இது விடயத்தில் கல்வி அமைச்சும் பரீட்சைகள் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2025 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராத சாதாரண தரப் பரீட்சைக்கான தினத்தை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய சாதாரண தரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியில்தான் ஹிஜ்ரி 1447 ரமலான் மாத நோன்பின் ஆரம்ப தினமாகும். அத்தினத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாவது, ஒரு பன்முக கலாசாரத்தைக் கொண்ட நாட்டில் பன்மைத்துவத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும்.
இதுபோன்று தேசியத்தின் ஒரு பிரதான சமய அனுஷ்டானங்களில் ஒன்றான ரமலானை முன்னிட்டு பரீட்சையை முற்படுத்துவது அல்லது பிற்படுத்துவதே அந்த சமயத்திற்கு கண்ணியளிப்பதாக அமையும்.
இது விடயமாக கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூகம் சார்பில் இந்த கோரிக்கையை விடுக்கின்றேன். அத்தோடு, இது விடயத்தில் கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறேன் என்றார்.
No comments:
Post a Comment