(எம்.மனோசித்ரா)
தபால் தொழிற்சங்கங்கள் கடந்த 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. இவ்வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டு ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்னும் சுமார் ஒன்றரை கோடி தபால் பொதிகள் நாடளாவிய ரீதியில் தேங்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
மத்திய தபால் பரிமாற்ற சேவை நிலையத்தில் கைவிரல் ரேகைப்பதிவு இயந்தியம் பொறுத்தப்பட்டமை மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு குறித்த சுற்றுநிரூபம் என்பனவே இதற்கு பிரதான காரணியாகும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
24ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியபோது தபால்மா அதிபர் மத்திய தபால் பரிமாற்ற சேவை நிலையத்தில் கைவிரல் ரேகைப்பதிவு இயந்திரத்தைப் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். அத்தோடு மேலதிக வேலை நேர கொடுப்பனவை செலுத்துவதற்காக பணிக்கு திரும்புமாறு சுற்றுநிரூபமொன்றையும் வெளியிட்டிருந்தார். அதற்கமைய ஒட்டு மொத்த தபால் பணியாளர்களும் அவ்வாறே செயற்பட்டோம்.
மத்திய தபால் பரிமாற்ற சேவையில் 30 சதவீதமானவை மேலதிக வேலை நேர கொடுப்பனவு முறைமையை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சேவைகளுக்கு பணியாளர்கள் ஒதுக்கப்படவில்லை. பணியாளர்களை ஒதுக்குவதற்கு பதிலாகவே மேலதிக வேலை நேர கொடுப்பனவு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையிலேயே இந்த சேவைகள் மேலதிக வேலை நேர கொடுப்பனவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பிரதி பலனாக 10 மில்லியனுக்கும் அதிகமான தபால் பொதிகள் மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் தேங்கியுள்ளன.
தபால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம் சகல தபாலகங்களிலும் சுமார் 5 நாட்களுக்கான தபால் பொதிகள் குவிந்துள்ளன. இவ்வாறு நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்றரை கோடி தபால் பொதிகள் தேங்கியுள்ளதாக நம்புகின்றோம்.
இந்த பொதிகளுக்குள் தரம் ஒன்றுக்குள் மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்கள், உயர்தரப் பரீட்சைகளுக்கான கடிதங்கள், நேர் காணல்களுக்கான கடிதங்கள், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள் என பல முக்கிய ஆவணங்கள் உள்ளன.
பொதுமக்களுக்கான முக்கிய கடிதங்களை இவ்வாறு தேக்கி வைத்திருப்பதற்கு தபால்மா அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த நெருக்கடிக்கு அவரே முற்றுமுழுதாக பொறுப்புக்கூற வேண்டும்.
இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் தபால்துறை முற்றாக வீழ்ச்சியடையும் என்று எச்சரிப்பதாக சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment