அரசாங்கம் வெளிப்படைத் தன்மையில் செயற்படவில்லை : எவ்வித ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவில்லை - முன்னாள் நீதி அமைச்சர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 29, 2025

அரசாங்கம் வெளிப்படைத் தன்மையில் செயற்படவில்லை : எவ்வித ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவில்லை - முன்னாள் நீதி அமைச்சர் தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்தல், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை தயாரித்தல் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையில் செயற்படவில்லை. துறைசார் நிபுணர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து எவ்வித ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என முன்னாள் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கான பணிகள் எதிர்வரும் மாதத்துக்குள் நிறைவுபடுத்தப்படும் என்று நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளமை கவனத்திற் கொள்ள வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாகவும், அதற்கு பதிலாக பிறிதொரு சட்டத்தை இயற்றுவதாகவே தேசிய மக்கள் சக்தி தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்டது. குறிப்பாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளித்தது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக பிறிதொரு சட்டத்தை இயற்றுவதற்கு நாங்கள் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளுக்கும் எதிராகவே தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் செயற்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைய பாதுகாப்புடன் தொடர்புடைய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

இலங்கையில் பயங்கரவாத அமைப்பு இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பயங்கரவாதத்தை அலட்சியப்படுத்த முடியாது. ஏனெனில் பூகோள பயங்கரவாதம் பல்வேறு வழிகளில் இன்றும் தாக்கம் செலுத்துகின்றன.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்தல், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை தயாரித்தல் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையில் செயற்படவில்லை. துறைசார் நிபுணர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து எவ்வித ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ள உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு தொடர்பில் விசேட கவனம் செலுத்துவோம். இந்த வரைவின் உள்ளடக்கம் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment