(எம்.மனோசித்ரா)
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் அரசியல் துன்புறுத்தலை நிறுத்துவதுமே எமது பயணத்தின் நோக்கமாகும். இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடிகளை ஒழிக்கும் செயல்முறைக்கு ஒத்துழைப்பை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் அரசியல் துன்புறுத்தலை நிறுத்துவதுமே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடிகளை ஒழிக்கும் செயல்முறைக்கு ஒத்துழைப்பை வழங்குவோம். அதற்கு அப்பால் செயற்படப் போவதில்லை.
ஊழல், மோசடிக்கு எதிராக நாமே முதலில் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றோம். நாட்டையே வங்குரோத்தயடைச் செய்தமைக்கு அடிப்படை உரிமை மீறல் வழக்கினை ஐக்கிய மக்கள் சக்தியே தாக்கல் செய்து தீர்ப்புகளைப் பெற்றுக் கொண்டது. ஊழல்வாதிகள் எம்மிடம் இல்லை என்று கூறி அரசாங்கமும், அரச தரப்பினரும் தாம் தூய்மையானவர்கள் எனக் காண்பிக்க முயற்சிக்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களை தெளிவாகவே எதிர்க்கிறது. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. பேச்சுச் சுதந்திரம், அரசியல் செயல்பாட்டுச் சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் கலாச்சார சுதந்திரம் போன்றன காணப்படுகின்றன. இந்த அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை தலைமையாகக் கொண்டு ஒன்றிணைந்து பயணிக்க ஒன்று சேருங்கள். பக்கச்சார்பற்ற வேலைத்திட்டம் பொது நன்மை, ஜனநாயகம், மனித மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதை மையமாகக் கொண்டு இந்த பயணம் அமையும்போது, சேரக்கூடியவர்கள் இந்தப் பயணத்தில் சேரலாம்.
நாட்டில் சுதந்திர ஊடகத்தைப் பாதுகாக்க வேண்டும். நாம் சமூகத்தின் கருத்துக்களை அறிந்து கொள்வதுடன், அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் வேண்டும்.
இந்த ஊடகத்துறையின் மீது கை வைக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க நல்லெண்ணத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில் சுதந்திர ஊடகங்களையும் பாதுகாப்போம் என்றார்.
.jpg)
No comments:
Post a Comment