தமிழரின் தாகம் தமிழீழம்தான், சூழ்நிலை காரணமாகவே சமஷ்டியைக் கோருகின்றனர் - ரவிகரன் எம்.பி இடித்துரைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 23, 2025

தமிழரின் தாகம் தமிழீழம்தான், சூழ்நிலை காரணமாகவே சமஷ்டியைக் கோருகின்றனர் - ரவிகரன் எம்.பி இடித்துரைப்பு

தமிழ் மக்கள் தமிழீழத்தை அடைவதற்கே விரும்புகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலை காரணமாகவே சமஷ்டியை எமது தமிழ் மக்கள் கோருகின்றார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 22.08.2025 பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனினால் முன்வைக்கப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் தமிழ் மக்கள் தனி நாட்டையோ, சமஷ்டியையோ கோரவில்லை என குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

இந்நிலையில் அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதனின் இக்கருத்தைக் கண்டித்ததுடன், மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இறுதியாக இங்கு ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எமது மக்கள் தமிழீழம் வேண்டுமென்றே கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் வன்னி மாவட்டத்தைச் சார்ந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் எமது தமிழ் மக்கள் தனிநாட்டையோ, சம்ஷ்டித் தீர்வினையோ கேட்கவில்லை எனத் தவறான கருத்தினை இங்கே பதிவு செய்துள்ளார்.

அவரிடம் யாரும் தனி நாட்டையோ, சமஷ்ட்டியையோ கேட்கவில்லை எனவும் குறிப்பிட்டுப் பேசினார். தமிழ் மக்கள் யாரும் அவரிடம் கேட்க மாட்டார்கள் அரசாங்கத்திடமே கேட்பார்கள். எமது மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனைப் பற்றியும், அவருடைய செயற்பாடுகள் தொடர்பிலும் நன்கு அறிவார்கள். எனவே அவரிடம் போய் தனி நாட்டையோ, சமஷ்டியையோ கேட்கமாட்டார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஒரு விடயத்தை இங்கு அழுத்தமாக கூறி வைக்க விரும்புகின்றேன். எமது தமிழ் மக்கள் எப்போதும் கேட்பது தமிழ் ஈழத்தைத்தான். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாகவே தமிழ் மக்கள் சமஷ்டியைக் கோருகின்றனர். அவ்வாறிருக்க இங்கு வந்து பிழையான கருத்துக்களை பதிவு செய்வதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

No comments:

Post a Comment