அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டிற்கு வரும் அந்நியச் செலாவணி வருமானங்களை தடை செய்யக் கூடாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில், தம்மால் கொண்டுவரப்பட்ட சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்த அரசாங்கமும் இதே பாணியில் செயற்படுமானால் வாக்களித்த மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடுமெனவும் தெரிவித்தார்.
தம்மால் கொண்டுவரப்படும் அபிவிருத்தி வேலைகளை திட்டமிட்டு தடுக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளை குறிப்பிட்டுக்கூறிய அவர், கட்டார் அரசாங்கம் நிதியுதவி வழங்குவதாக உத்தரவாதமளித்த புனர்நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், "மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் குறிப்பிட்ட இனத்தை அல்லது சமூகத்தை குறிவைத்து பழிவாங்கும் போக்கை தொடர்ந்தால், நாட்டினுடைய பொருளாதார நிலை அதலபாதாளத்துக்கு செல்லும்.
நாட்டில் பத்து வீதமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்த நாடு எல்லோருக்கும் சொந்தமானது. இருந்தபோதும் அரசாங்க நியமனங்களில் ஒரு முஸ்லிமாவது சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இது, கவலையளிக்கிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அண்மையில் நடத்தப்பட்ட ஹர்த்தால், ஒரு இனத்துக்கு மாத்திரமானது என்ற தொனிப்பொருளில் பேசப்பட்டது. வட, கிழக்கில் முஸ்லிம்கள் வாழ்ந்திருந்த போதும், முஸ்லிம் கட்சிகளிடம் இது குறித்து கலந்துரையாடவில்லை. ஒருதலைப்பட்சமாக அழைப்பு விடுக்கப்பட்ட இந்த ஹர்த்தாலை, ஏற்றுக் கொள்வதற்கான நியாயங்கள் எதுவும் தென்படவில்லை. இதனால்தான் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதிலிருந்து நாங்கள் தவிர்ந்து கொண்டோம்.
செம்மணியாகட்டும், குருக்கள் மடமாகட்டும், இதைச் செய்தவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும். தகுதி தராதரம் பாராமல் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்துத்தான் அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் ஆணை வழங்கினர். எனவே, இந்த நம்பிக்கை பாழாகாமல் பாதுகாக்கின்ற பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது" என்றார்.
No comments:
Post a Comment