செம்மணி மனிதப் புதைகுழிக்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை : சோமரத்ன ராஜபக்சவும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் : குற்றமிழைத்த படையினர் தப்பியோடாமலிருக்க நடவடிக்கை தேவை - வலியுறுத்திய ரவிகரன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Thursday, August 21, 2025

செம்மணி மனிதப் புதைகுழிக்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை : சோமரத்ன ராஜபக்சவும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் : குற்றமிழைத்த படையினர் தப்பியோடாமலிருக்க நடவடிக்கை தேவை - வலியுறுத்திய ரவிகரன் எம்.பி.

யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதிவிசாரணை தேவை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச என்னும் முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல், இராணுவத்தின் படுகொலைச் செயற்பாடுகள்தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றுக்கு சாட்சியமளித்த பி2899 என்னும் வழக்கினை தற்போதைய செம்மணி மனிதப் புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்துவதுடன், பன்னாட்டு நீதி விசாரணைகளில் சோமரத்ன ராஜபக்ச இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பது தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் வழங்கவரும் மக்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அச்சுறுத்துவதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மேலும் இந்த செம்மணி கோரப்படுகொலையின் விசாரணைகள் மும்முரமடையும்போது குற்றமிழைத்த படையினர் நாட்டைவிட்டுத் தப்பியோட வாய்ப்பிருப்பதாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவ்விடயத்தில் குற்றமிழைத்த தரப்பினர் நாட்டை விட்டு தப்பிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் 21.08.2025 உரையாற்றுகையிலேயே அவர் இந்தவிடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதிவிசாரணை தேவை


செம்மணி சிந்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் பன்னாட்டுக் கண்காணிப்பு அவசியமென்பதை வலியுறுத்துவதுடன், பன்னாட்டு நிபுணத்துவம் பின்பற்றப்பட்டு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் இந்த உயரிய சபையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன். அத்தோடு செம்மணி அகழ்வாய்வுப்பணிகளுக்குரிய தொழில்நுட்பம்சார் நிபுணத்துவத்தை வழங்குவதுதொடர்பில் ஆராய்ந்துவருவதாக பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் இராஜாங்கசெயலாளர் டேவிட் லமி அண்மையில் தெரிவித்துள்ளார். அவரின் இக்கருத்தினை வரவேற்பதுடன், அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இவ்வாறாக இந்த செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தமது நிபுணத்துவங்களை வழங்குவதற்கு முன்வரும் பன்னாடுகளுக்கு இந்த அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன், அகழ்வாய்வில் அனைத்துவிதமான பன்னாட்டு நிபுணத்துவங்களும் பின்பற்றப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு பன்னாட்டு தடயவியல் நிபுணர்களும், பன்னாட்டு மனிதஉரிமைகள் நிபுணர்களும் இந்த அகழ்வாய்வுகளில் பங்கேற்கவேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரத்திற்கு சுயாதீனமானதும் நம்பிக்கைத்தன்மைமிக்க பன்னாட்டு நீதிவிசாரணையை மேற்கொள்ளுமாறும் இவ்வுயரியசபையினைக் கோருகின்றேன்.

குறிப்பாக தற்போது இந்த நாட்டில் பெரும்பேசுபொருளாக யாழ்பாணம், செம்மணி, சிந்துபாத்தி மயானப் புதைகுழி விவகாரம் மாறியிருக்கின்றது. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் இதுவரை இரண்டுகட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் செம்மணிமனிதப் புதைகுழியின் முதலாம்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் பரீட்சார்த்த அகழ்வுப்பணியாக 09நாட்கள் இடம்பெற்று ஜூன் மாதம் 07ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. அதனைத் தொடர்து இரண்டாங்கட்ட மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றால் 45நாட்கள் அனுமதிவழங்கப்பட்டநிலையில் கடந்த ஜூன்மாதம் 26ஆம் திகதி இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இண்டாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் கடந்த ஜூலை 10ஆம் திகதி அகழ்வாய்வாளர்களின் ஓய்விற்காக இடைநிறுத்தப்பட்டுஇ கடந்த 21.07.2025ஆம் திகதியன்று மீள இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவந்தநிலையில் கடந்த 06.08.2025அன்று 32ஆவதுநாளுடன் இரண்டாம்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. அந்தவகையில் இதுவரை குறித்த செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து மொத்தம் 147மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 140மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதிமீண்டும் அகழ்வாய்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் இந்த அழ்வாய்வுகளில் ஈடுபடும் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ கடந்த 14.08.2025அன்று நீதிமன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், அகழ்வாய்விற்கு இன்னும் குறைந்தது எட்டுவாரங்கள் தேவைப்படுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இதுவரை மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வாய்வுகளில் பெண்கள், சிறார்கள், குழந்தைகள்என பலதரப்பட்டோருடைய எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் பால்அருந்தும்போத்தல், சிறார்களின் விளையாட்டுப்பொம்மை, சிறுமிகளின் ஆடைகள், காலணிகள், கண்ணாடிவளையல்கள், பாடசாலைப் புத்தகப்பை என்பன சான்றுப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன. இவ்வாறான கொடூரங்களைக் காணும்போது நெஞ்சமெல்லாம் பதைபதைக்கின்றது. கண்களில் நீர்நிறைகின்றது.

மேலும்இதுவரை இனங்காணப்பட்ட 147மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளில் 90வீதத்திற்கும் அதிகமானவை நிர்வாணமாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டவையென கடந்த 14ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியால் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இதன்மூலம் இங்கு பாரியகுற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்பதும், இந்தப் புதைகுழியில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளென பல்வேறு தரப்பினரும் மிகக் கொடூரமாகப் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட விடயமும் தற்போது அம்பலமாகியிருக்கின்றது. வார்த்தைகளில் கூறிவிடமுடியாத கொடூரமான தமிழினப் படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கான மிகமுக்கியமான ஆதாரமாகவே செம்மணிமனிதப் புதைகுழியைப் பார்க்கமுடிகின்றது.

வாக்குமூலம்வழங்குவோரை அச்சுறுத்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

செம்மணியில் எலும்புக்கூடுகளை அடையாளங்காணும்பணிதொடர்பான விசாரணைகளில் வாக்குமூலங்களையளிக்கவரும் மக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விடயம்தொடர்பில் கடந்த 14ஆம்திகதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், கே.குருபரன், வி.மணிவண்ணன் ஆகியோரால் நீதிமன்றிலும் முறையீடுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அச்சுறுத்தி, சிரமத்திற்குள்ளாக்கி வாக்குமூலமளிக்கவரும் மக்களை அங்குவரவிடாமல் தடுக்கும் நோக்குடன் செயற்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இவ்வாறான அச்சுறுத்தல்செயற்பாடுகள் இனிமேல் இடம்பெறக்கூடாதெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

படுகொலைகளோடுதொடர்புடைய படையினர் தப்பிக்காமலிருக்க நடவடிக்கை தேவை

கடந்த 1999இல் யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர்குறித்து விசாரிக்க இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவினால் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில், கே.எச்.கமிலஸ் பெர்னான்டோ, ஜெஸிமா ஸ்மாயில், சி.எம்.இக்பால் ஆகியநால்வர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த விசாரணைக் குழுவினால் 210பக்கங்களைக்கொண்ட நீண்ட விசாரணை அறிக்கை கடந்த 2003 ஒக்டோபர் 28ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அவ்வறிக்கையில் காணாமல்போனவர்களில் பெருமளவானோர் இராணுவத்தினால் கொல்லப்பட்டிருக்கலாமெனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், படுகொலையுடன் தொடர்புடைய இராணுவமுகாம்கள், இராணுவஅதிகாரிகள், இராணவத்தினரின் பெயர்களும் அவ்வறிக்iயில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எனவே இந்த மனிதப் புதைகுழி விசாரணைகள் மும்முரமாக இடம்பெறும்போது அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய படையினர் தப்பியோட வாய்ப்புள்ளது. ஆகவே அதற்குமுன்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சோமரத்ன ராஜபக்ச பன்னாட்டு நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும்

கடந்த 1996ஆம்ஆண்டு காலப்பகுதியில் செம்மணி இராணுவசோதனைச்சாவடியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலைவழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச உட்பட ஆறு இராணுவத்தினருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி மரணதண்டனை வழங்கியிருந்தது.

நீதிமன்றத்தின் இந்தத்தீர்பையடுத்து, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் 300தொடக்கம் 400வரையான மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றில் சாட்சியமளித்ததற்கமைய அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அதனைத்தொடர்ந்து செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் 15 எலும்புக்கூட்டுத்தொகுதிகளும் மீட்கப்பட்டிருந்தன. பின்னர் இந்தவிசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இதுதொடர்பான வழக்குவிசாரணைகள் கிடப்பில்போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச அப்போது நீதிமன்றிற்கு வழங்கிய சாட்சியத்தை ஆதாரப்படுத்தும்வகையில் தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் மிக அதிகளவில் இனங்காணப்படுகின்றன. எனவே குறித்த வழக்குமீள எடுத்தக்கொள்ளப்பட்டு தற்போதைய மனிதப்புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்தப்படவேண்டும். யாழ் நீதவான் நீதிமன்ற வழக்கேட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றுக்கு அனுப்பப்பட்ட பி2899 என்னும் வழக்கு மீளவும் யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனக் கோருகின்றேன்.

இத்தகையசூழலில் பன்னாட்டு விசாரணையொன்று முன்னெடுக்கப்படும்பட்சத்தில் கடந்த 1996காலப்பகுதயில் செம்மணிதொடக்கம் துண்டி இராணுவமுகாம்வரை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல படுகொலைகள், பலசேனா தலைமையகம்முதல் இராணுவத்தால் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம்பற்றிய விபரங்கள், மணியம்தோட்டம்பகுதியிலுள்ள புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அண்மையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார். அப்போதைய அரசதலைவர் சந்திரிக்கா அம்மையார், அப்போதைய பாதுகாப்புச்செயலர் உள்ளிட்டதரப்பினரும் இத்தகைய வதைமுகாம்கள்தொடர்பில் அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அக்காலப்பகுதியில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக 07ஆவது படைத்தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரிகளான கப்டன் லலித் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன் துடுகல, லெப்டினன் உதயகுமார ஆகியோருடன் பொலிஸ் பரிசோதகர்களான அப்துல் ஹமீட் நஸார், சமரசிங்க ஆகியோரின் பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எனவே இந்த செம்மணி சிந்துபாத்தி மனிதப்புதைகுழிக்கு விவகாரத்திற்கு தலையீடுகளற்ற சுயாதீன பன்னாட்டு நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அந்த பன்னாட்டு நீதிவிசாரணைகளில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியங்களும் பெறப்படவேண்டுமென இந்த உயரியசபையைக்கோருகின்றேன்.

அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற பன்னாட்டு நீதிவிசாரணைக்கு இந்த அரசானது தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் எமது பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கேட்டுக்கொள்கின்றேன். பன்னாட்டு நீதிவிசாரணைமாத்திரமே பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றத்தரும் ஓரே மார்க்கமாகஅமையும்.

அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப்புதைகுழியில் தொடர்து மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வாய்வுப் பணிகளில் பன்னாட்டுப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதல், பன்னாட்டு கண்காணிப்புகள் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக்கேட்டுக்கொள்வதுடன், பன்னாட்டு நிபுணத்துவங்கள்பின்பற்றப்பட்டு அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிவிவகாரத்திற்கும் பன்னாட்டு நீதிவிசாரணை தேவையென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment