காசாவில் மிகப்பெரிய நகர்புற பகுதியான காசா நகரை கைப்பற்றும் தரைவழி படை நடவடிக்கையின் முதல் கட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில் அங்கு கடும் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதோடு அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் ஒருமுறை அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
காசா போர் நிறுத்த முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு ஹமாஸ் ஒப்புதல் அளித்த போர் நிறுத்த முன்வொழிவு குறித்து இஸ்ரேல் பரிசீலனை செய்துவரும் நிலையிலேயே படை நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு இதனையொட்டி மேலதிக துருப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய துருப்புகள் காசா நகரின் புறநகர்களில் தற்போது நிலை கொண்டுள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கடும் தாக்குதல் இடம்பெற்று வருகின்றது. 2.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் காசா நகரில் வசித்து வருகின்றனர்.
‘காசா நகர் மீதான தாக்குதலின் ஆரம்ப படை நடவடிக்கை மற்றும் முதல் கட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். ஏற்கனவே காசா நகரின் புறநகரங்களை இஸ்ரேலிய படை கைப்பற்றியுள்ளது’ என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எபி டெப்ரிக் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உடன் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் உயிரிழப்புகளையும் அழிவுகளையுமே ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் படை நடவடிக்கையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் வெளியாகி இருந்தன. எவ்வாறாயினும் இந்தத் திட்டத்தை செயற்படுத்தும் வகையில் சுமார் 60,000 மேலதிக துருப்புகளுக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் படைகள் எதிர்வரும் செப்டெம்பரில் பணியில் இணையவுள்ளன.
காசா நகரை ஹமாஸ் அமைப்பின் கோட்டை என இஸ்ரேல் வர்ணித்து வருவதோடு இந்த நகரை கைப்பற்றுவதற்கான காலக்கெடுவை குறைத்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் ‘காசா நகரில் அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான கொடிய போரை தொடர்ந்து நடத்தி வருவதாக’ இஸ்ரேலிய தலைவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. இது பிராந்திய மத்தியஸ்தர்களால் முன் வைக்கப்பட்ட புதிய போர் நிறுத்த திட்டத்தை புறக்கணிப்பதாக உள்ளது என்று அது குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவுக்காக மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்கொப் முன்வைத்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே 60 நாள் போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றை கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் முன்வைத்துள்ளனர்.
இதில் இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக பாதி எண்ணிக்கையான பணயக் கைதிகளை விடுவிக்க பரித்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் போர் நிறுத்தத்திற்கு அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலிய தரப்பு கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும் இந்த முன்மொழிவு குறித்த ஹமாஸ் அமைப்பின் பதிலை இஸ்ரேல் பரிசீலித்து வருவதோடு இதுவரை அதற்கான பதிலை வழங்கவில்லை.
காசா நகரை இஸ்ரேலிய படை நெருங்கி இருக்கும் நிலையில் அங்கிருந்து மக்கள் வெளியேற ஆரம்பித்திருப்பதோடு வெளியேற்றத்திற்கு பலரும் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய துருப்புகள் நகருக்குள் நுழைவதற்கு முன்னர் அங்கிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசா நகரின் சிறு சிறு சுற்றப்புறங்களில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக அங்குள்ள ஒரே கிறிஸ்தவ தேவாலயத்தின் மேற்பார்வையாளரான ஜெரூசலத்தின் லத்தீன் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இஸ்ரேலின் முற்றுகையால் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பட்டினியால் தவித்து வரும் நிலையிலேயே பலஸ்தீனர்கள் காசா நகரில் இருந்து தெற்கை நோக்கி வெளியேறிவருகின்றனர். 22 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் இந்தப் போரில் காசாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசா மாநகர அவசரக் குழு தலைவரான முஸ்தபா கஸ்ஸத், நகரின் நிலைமை மோசமடைந்திருப்பதாகவும் பெரும்பாலான மக்கள் கிழக்கை நோக்கி வெளியேறி வருவதாகவும் கடந்த புதனன்று (20) குறிப்பிட்டிருந்தார். அந்த நகரின் குடியிருப்பாளர் ஒருவரான 64 வயது அனீஸ் தலூல் கூறும்போது, ‘செய்தூனின் (புறநகர்) பெரும்பாலான கட்டடங்கள் அழிக்கப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்’ என்றார்.
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்கள் இடைவிடாது இடம்பெற்று வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 70 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் உதவிக்கு காத்திருந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதலில் பலியான 18 பேரும் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது..
இந்நிலையில் கடந்த 2023 ஒக்டோபர் தொடக்கம் நீடித்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 61,192 ஆக அதிகரித்துள்ளது எனவும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மறுபுறம் ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் மேலும் இரு பலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக அந்த அமைச்சு தெரிவித்தது.
No comments:
Post a Comment