எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் அரசியலமைப்பு எவ்வாறு செயற்படுத்தப்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் - பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 29, 2025

எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் அரசியலமைப்பு எவ்வாறு செயற்படுத்தப்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் - பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்புடனான சர்வாதிகாரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் அரசியலமைப்பு எவ்வாறு செயற்படுத்தப்பட்டது, குடும்ப ஆட்சி நிர்வாகம் பற்றி நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஊழல் மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தால் எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்துள்ளார்கள் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவது அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது. இவர்களின் தற்போதைய கூட்டிணைவு அவர்களுக்கே எதிர்கால அரசியலுக்கு சவாலாக அமையலாம். பிரதான நிதி மோசடியாளரை கைது செய்தவுடன் ஏனைய ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளார்கள்.

சட்டத்துக்கு அமைய கைதுகள் இடம்பெறும்போது அது அரசியலமைப்புடனான சர்வாதிகாரம் என்று குறிப்பிடுகிறார்கள்.

அரசியலமைப்பு பற்றி தற்போது பேசும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு முரணாக ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை சட்டவிரோதமான முறையில் பிரதமராக நியமித்ததை மறந்து விட்டார்.

நீதித்துறை சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். அரசியல் அழுத்தம் பிரயோகிக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கி, அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்ததையும் மறந்து விட்டார்.

அரசியலமைப்புடனான சர்வாதிகாரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் அரசியலமைப்பு எவ்வாறு செயற்படுத்தப்பட்டது, குடும்ப ஆட்சி நிர்வாகம் பற்றி நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை பேச்சளவில் மாத்திரம் செயற்படுத்தினார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் செயற்படுகிறது. சட்டத்தின் முன் எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது என்றார்.

No comments:

Post a Comment