அடுத்த ஆட்சிலும் தொடர்வதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை, இயலுமானவரை விரைவில் தீர்வுகாண வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 29, 2025

அடுத்த ஆட்சிலும் தொடர்வதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை, இயலுமானவரை விரைவில் தீர்வுகாண வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு

(நா.தனுஜா)

எமது அரசாங்கம் 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டது. இப்பிரச்சினையின் ஓரங்கமான எமக்கு, இது தொடர்ந்து நீடிக்காத வண்ணம் தீர்வுகாண வேண்டிய கடப்பாடு இருக்கிறது. எனவே வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை உறுதிப்படுத்துவதுடன் இயலுமானவரை விரைவாக இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு (30) காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகையில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்நிகழ்வில் உரையாற்றிய நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் கூறியதாவது, வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் என்பது எமது வரலாற்றின் துயர்மிகுந்த பக்கத்தை நினைவு கூருவதற்கான தினமாகும். அத்தினத்துக்கும், அது பிரதிபலிக்கும் துயரத்துக்கும் சொற்கள் மூலம் அர்த்தம் வழங்க முடியாது என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

கணவனோ, மகனோ அல்லது சகோதரனோ வலிந்து காணாமலாக்கப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் வாழ்வதென்பது ஆயுளுக்கும் தொடரும் வேதனை என்பதை நானறிவேன்.

ஆகவே இதனை வெறுமனே சம்பிரதாயபூர்வ நினைவு கூரலாகவோ அல்லது வருடத்தில் ஒருமுறை மாத்திரம் பேசும் விடயமாகவோ வைத்திருப்பதற்கு இடமளிக்கமாட்டோம். பாதிக்கப்பட்ட தரப்பினரை ஏமாற்றவும் மாட்டோம்.

நான் இப்போது எதனைக் கூறினாலும், பாதிக்கப்பட்ட மக்கள் இதனை சந்தேகக் கண் கொண்டே நோக்குவர். ஏனெனில் நான் கூறுகின்ற விடயங்கள் செயல் வடிவம் பெற வேண்டியிருக்கிறது. நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி 9 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன.

வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பது நாம் உருவாக்கிய பிரச்சினை அல்ல. எனவே இந்தப் பிரச்சினை எமது அடுத்த ஆட்சிக் காலத்திலும் தொடர்வதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக இதற்கு இயலுமானவரை விரைவில் தீர்வுகாண வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.

அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பது குறித்தவொரு இனக் குழுமத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையல்ல. மாறாக வலிந்து காணாமலாக்கப்படல்களால் நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் காணாமல்போன சிலர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே விசாரணை மற்றும் தேடுதல் செயன்முறைகளுக்கான அலுவலகத்தின் இயலுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

வலிந்து காணாமலாக்கப்படல் என்பது ஒரு விபத்து அல்ல. மாறாக அதுவோர் குற்றமாகும். அதன் மூலம் உயிர் வாழ்வதற்கான உரிமை, குடும்பத்துடன் வாழ்வதற்கான உரிமை மற்றும் கௌரவமாக வாழ்வதற்கான உரிமை என்பன பறிக்கப்படுகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உண்மை, நீதி மற்றும் இழப்பீடு என்பவற்றை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்ட வரைவின் சில உள்ளடக்கங்கள் காணாமல் போனோர் பற்றிய அலுவலகச் சட்டம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகச் சட்டம் ஆகிய சுயாதீன சட்டங்களில் தலையீடு செய்யும் வகையில் அமைந்துள்ளன. எனவே அவற்றைச் சீரமைக்குமாறு சட்ட வரைஞர் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

அதேவேளை இவ்வனைத்துச் செயன்முறைகள் மற்றும் கட்டமைப்புக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியவையாக அமைய வேண்டும். அதன்படி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நீதி நிலைநாட்டப்படும்.

அதன் ஓரங்கமாகவே எதிர்வரும் செப்டெம்பர் மாதத் தொடக்கத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவிருப்பதுடன், அதற்குப் பதிலீடாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாட்டை நாம் கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்ட தரப்பினரான உங்களது உறுதிப்பாடே எமக்குத் தைரியம் அளிக்கிறது.

இப்போதைய எமது அரசாங்கம் 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டது. எனவே நாம் இப்பிரச்சினையின் ஓரங்கமாவோம். ஆகவே இப்பிரச்சினை தொடர்ந்து நீடிக்காத வண்ணம் தீர்வுகாண வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.

மேலும் மனிதப் புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், நாம் அதனை சிறப்பாகக் கையாண்டு வருகிறோம். இருப்பினும் எமக்கு தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன. அவற்றை சர்வதேச சமூகத்திடம் கோரியிருக்கிறோம்.

தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் விஞ்ஞானபூர்வ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இணங்கியிருக்கின்றன. இங்கு அதிகளவு கண்ணீர் சிந்தப்பட்டிருக்கிறது. அதிகளவு இரத்தமும் சிந்தப்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் அவற்றைக் கடந்து தீர்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment