பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் : தகவல்கள் தெரிந்தால் அறிவிக்கவும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 20, 2025

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் : தகவல்கள் தெரிந்தால் அறிவிக்கவும்

(எம்.வை.எம்.சியாம்)

வவுனியாவில் கைக் குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

ஏற்கனவே கிரிபத்கொடை மற்றும் வவுனியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின்போது குறித்த மூவர் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவலுக்கு அமைய அவர்களை கைது செய்ய தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 21 ஆம் திகதி கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 36 ரவைகளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த எல்.ரி.ரி அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த களியப்பெருமாள் ரமேஷ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய வவுனியா, நேரியக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த தேவா என்று அழைக்கப்படும் அன்ரன் சுவேந்திரன் விக்ரம் என்பவர் வவுனியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபருக்கு சொந்தமான வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது அங்கிருந்து 86 கைக்குண்டுகள், ரி-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 321 துப்பாக்கி ரவைகள், போதைப் பொருள் மாத்திரைகள் என்பன மீட்டிக்கபட்டிருந்தன.

இதற்கமைய கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேகநபர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் மூன்று சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை பிரிவின் அதிகாரிகள் வவுனியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவர்கள் வசித்து வந்த பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியைக்கோரியுள்ளதுடன் அவர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் விபரம் பின்வருமாறு

பெயர் - ஜீவராசா சுஜீவன்
வயது - 30
முகவரி - காந்தி நகர், நெரியங்குளம், வவுனியா
தே.அ.இல - 950554215

பெயர் - இளங்கோ இசைவிந்தன்
வயது - 27
முகவரி - செட்டிக்குளம்
தே.அ.இல - 199836210402

பெயர் - மகேந்திரன் யோகராசா
வயது - 27
முகவரி - வட்டுக்கோட்டை
தே.அ.இல- 981633881

மேற்படி சந்தேகநபர்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி 071- 8591966 அல்லது எனும் விசாரணை பிரிவு இல-1 - 071 8596150 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment