தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன் : அரசாங்கத்திடம் பல கேள்விகளை தொடுத்த காதர் மஸ்தான் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 20, 2025

தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன் : அரசாங்கத்திடம் பல கேள்விகளை தொடுத்த காதர் மஸ்தான் எம்.பி.

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு இதுவரை விடுவிக்கப்படாமல் இருக்கிறது. அதனை விரைவாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நிலையியற் கட்டளை 27/2 கீழ் கேள்வி நேரத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில், புனித அல்குர்ஆனை அறபு மொழியில் மீள் பிரசுரிக்கவும் ஏனைய மொழிகளில் மொழி பெயர்த்து பிரசுரிக்கும் உத்தியோகபூர்வமான உரிமை சவுதி அரேபியா அரசின் "மன்னர் பஹத் அல்குர்ஆன் பிரசுரிப்பு நிலையம்" கொண்டுள்ளதை உலகின் அனைத்து நாடுகளிலும் பரந்து வாழும் 200 கோடி முஸ்லிம் மக்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன் உலகின் அனைத்து நாடுகளும் அங்கீகரித்துள்ளது.

உஸ்மானிய கிலாபத் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட இந்த புனிதப் பணிக்கான பதிப்புரிமையும், தனித்துவத்தன்மையும், புனிதத்துவமும் களங்கமின்றி இன்றுவரை பேணிக்காக்கப்பட்டு வருகிறது.

ஆங்கிலம், பிரேன்சு, ஜேர்மனி, ரஷ்யா, சீனா, ஸ்பானிய, ஹிந்தி, உருது. சிங்களம், தமிழ், ஜப்பான், மலையாளம், கொரியா, நேபாளம் உள்ளிட்ட ஐம்பதிற்கும் அதிகமான மொழிகளில் இந்த இறை வேதம் மொழி பெயர்க்கப்பட்டு எவ்வித அடிக்குறிப்புக்களோ அல்லது தனிக்கைகளோ இன்றி மக்கள் கைகளை அடைந்துள்ளது.

இந்தப் பின்னணியில் இரு புனிதத் தலங்களின் பணிப்பாளர் சவுதி அரசின் அப்போதைய மன்னர் பஹத் பின் அப்துல் அஸீஸின் பணிப்புரையில் இஸ்லாமிய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மார்க்கத் தீர்ப்புத் துறையின் பிரதம பிரசாரகர் அஷ்ஷேக் முஹம்மது இக்பால் மதனீயின் தலைமையில் இந்த தமிழ் மொழி பெயர்ப்புப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த தமிழ் மொழி பெயர்ப்பை ஒப்பு நோக்கி சரிபார்க்கும் பணியில் இலங்கையைச் சேர்ந்த தலைசிறந்த உலமாக்களான, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (மறைந்த) பொதுச் செயலாளர் அஷ்ஷேக் முஹம்மது மக்தூம் அஹ்மது முபாரக் உள்ளிட்ட, பேராசிரியர் அஷ்ஷேக் முஸ்தபா மௌலானா, அஷ்ஷேக் அபூபக்கர் ஸித்தீக், கபூரிய்யா அரபுக் கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் அஷ்ஷேக் நூருல் ஹம்ஸா முஹம்மது ஸயீத் ஆகியோர் 1993 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டமை எமது நாட்டுக்குக் கிடைத்த கௌரவமாகும் என்ற அடிப்படையில் இது தொடர்பில் பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதிலை எதிர்பார்க்கிறேன்.

இந்த புனித அல்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதிகள் இன்று இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ஏனைய ஆசிய நாடுகளில் எவ்வித தடைகளுமின்றி விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் வடிவில் பல்வேறு வலைத்தளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களத்தில் புனித அல்குர்ஆன் பிரதிகளைச் சுமந்த FSCU 8233306 இலக்க கொள்கலன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கலனில் இருந்த ஆவணங்களில் அறபு மற்றும் தமிழ் மொழி பெயர்ப்பு பிரதிகளின் எண்ணிக்கை என்ன?

அவற்றில் இதுவரை எத்தனை அல்குர்ஆன் பிரதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன? எத்தனை பிரதிகள் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளன? அதற்கான காரணம் என்ன?

முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரின் MRCA/R/09/NOL/2025 VI எனும் 2025.07.15 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின்படி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற பாதுகாப்பு கவுன்ஸில் அமர்வில் தற்போது சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்காக சவுதி அரசினால் அன்பளிப்புச் செய்த புனித அல்குர்ஆன் தமிழ் பிரதிகள் சவுதி அரசின் மன்னர் பஹத் அல்குர்ஆன் பிரசுரிப்பு நிலையத்துக்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டு சரியான விளக்கத்துடனான அடிக்குறிப்புக்கள் இடப்பட்டு புனித அல்குர்ஆன் தமிழ் பிரதிகள் திருத்தப்படும் வரை அவற்றை விடுவிக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டதன் காரணங்கள் யாவை?

இலங்கையின் தலைசிறந்த உலமாக்கள் சரிபார்ந்து திருத்தி பிரசுரித்த புனித அல்குர்ஆன் பிரதியை மீள் பரிசிலனை செய்ய அல்லது இஸ்லாமிய வெளியீடுகளை மீள் பரிசீலனை செய்ய அரசாங்கத்தினால் ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பின் அவர்களது பெயர் விபரம், உத்தியோகபூர்வமான நியமன வர்த்தமானி அறிவித்தல் மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய விபரத்தை இந்த சபையில் சமர்ப்பிக்கவும்?

ஏனைய சமய புனித நூல்கள் மீள் பரிசீலனை செய்து, அந்த சமய போதகர்களின் அனுமதியை பெற்று, புனித நூல்களை கொண்டுவரும் விதமாக அரசாங்கத்தால் ஏனைய சமயங்கள் சார்ந்த குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றதா? அப்படியாயின் அவர்களின் விபரங்கள் என்ன?

புனித அல்குர்ஆன் தமிழ் பிரதிகள் தொடர்பாக இந்தக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் யாவை? அவை தொடர்பாக இந்த அரசாங்கம் பூரணமாக உடன்படுகிறதா? தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல்குர்ஆன் தமிழ் பிரதிகளை அவசரமாக விடுவிக்க அரசாங்கம் எடுக்கும் நடடிவடிக்கைகள் என்ன? என்றார்.

No comments:

Post a Comment