ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதற்கு முதலீடு செய்யுங்கள் : வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Friday, August 29, 2025

ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதற்கு முதலீடு செய்யுங்கள் : வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதற்கு முதலீடு செய்யுங்கள் என ஜனாதிபதி வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய வெறும் ஊக்குவிப்புத் திட்டங்கள் மட்டும் போதாது என்றும், அரச மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைக்கும் புதிய மூலோபாயத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா, அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் கதிர்காமம் போன்ற பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு, வசதியான சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பாக விரைவில் முறையான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையில் தற்போது நிலவும் குறைபாடுகள் மற்றும் சவால்கள் குறித்து வர்த்தகர்களினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அப்பொன்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்திஅதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், ஏற்றுமதி அபிவிருத்தி சபைத் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் தனியார் துறை வர்த்தகர்கள் மற்றும் தரப்பினர்கள் குழு இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment