முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கவிந்த ஜயவர்தன மற்றும் மயந்த திசாநாயக்க ஆகியோரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையில் இந்த முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் நோக்கில், இன்று (23) கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டில் தற்போதைய அரசாங்கம் அரசியல் அடக்குமுறையை செயல்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டை ஒப்படைத்த பின்னர் ஊடகங்களுக்கு பேசிய காவிந்த ஜெயவர்தன, இலங்கையில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சுதந்திரம் என்பன அடக்கு முறைக்குட்படுத்தப்படுகின்றன. அந்த வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருக்கின்றார். அரசாங்கத்தின் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இலங்கையில் தற்போதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஜனநாயகம், அரசியல் சுதந்திரம் என்பன அடக்கு முறைக்குட்படுத்தப்படுகின்றன. அவற்றில் முன்னாள் அரச தலைவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளமை அவரது அரசியல் சுதந்திரத்தை மீறும் செயற்பாடாகும்.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம் கோருகின்றோம்.
எம்மால் கையளிக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதி ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான இந்த அநீதிக்கு எதிராக உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதே ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தனித்து விடப்படமாட்டார். நாம் என்றும் அவருடன் நிற்போம் என்றார்.
No comments:
Post a Comment