இறுதிக் கட்டப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் போராளிகள் படுகொலை செய்யப்பட்டு கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களின் விகாரைகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு தமிழ் இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், தமிழர் தாயகப் பகுதிகளில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பன்னாட்டு நீதி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமெனவும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவிலிருந்து செம்மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் இனவழிப்பு விவகாரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், வடகிழக்கில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நாம் பன்னாட்டு நீதி விசாரணையினையே தொடர்ச்சியாக கோரி வருகின்றோம்.
கடந்த காலத்தில் தமிழர்கள் மீது இனவழிப்புச் செயற்பாடுகள் இடம்பெற்றன என்பதற்கு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளும், மனிதப் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக் கூடுகளும்,சாட்சியாக இருக்கின்றன. இதனை யாருமே மறுக்க முடியாது.
தற்போது செம்மணி மனிதப் புதைகுழி பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. செம்மணியில் அகழ, அகழ எம்மவர்கள் எலும்புக் கூடுகளாக மீட்கப்படுகின்ற அவலங்களைக் காண்கின்றோம்.
கொலை செய்தவனிடமே நீதியைக் கோருகின்ற உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறையில் எமக்கு கடுகளவும் நம்பிக்கை கிடையாது.
ஆகவேதான் தமிழ் இனவழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மனிதப் புதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தொடர்சியாக பன்னாட்டு நீதி விசாரணையினைக் கோருகின்றோம்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் திட்டமிட்ட வகையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு இனங்காணப்பட்டிருக்கவில்லை. மாறாக இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் எதேற்சியான சந்தர்ப்பங்களிலேயே இனங்காணப்பட்டன.
ஆனால் முல்லைத்தீவில் வட்டுவாகல் மற்றும் கேப்பாப்புலவு பகுதிகளில் இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் அகற்றப்பட்டு விகாரைகளின் கீழ்ப்பகுதிகள் அகழ்ந்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அல்லது நவீன கருவிகளின் துணையுடன் ஸ்கேன் செய்யப்பட்டு விகாரையின் கீழ்ப்பகுதியில் உள்ள விடயங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றேன்.
கடந்த 2009ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த போராளிகள் மற்றும் மக்களை இராணுவம் கைது செய்துள்ளது. அதன் பின்னர் அவ்வாறு இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்திற்கு அருகே கடற்கரை நோக்கி போகும் பாதையினூடாக பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதேபோல் சரணடைந்த பலர் கேப்பாப்புலவு நோக்கியும் இராணுவத்தினரால் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவ்வாறு இராணுவத்தால் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திருப்பி அழைத்து வரப்படவில்லை. என்ன ஆனார்கள் என்பதும் தெரியாமலுள்ளது. அப்படியெனில் அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எங்கே போனார்கள்.
தனிச் சைவத் தமிழ் கிராமமான வட்டுவாகலில் எதற்கு பாரிய விகாரை அமைக்கப்பட்டது. அந்த விகாரையை அகற்றி அகழ்வாய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது விசேட ஸ்கேன் கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு உண்மைத் தன்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதேபோல் கேப்பாப்புலவு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள பாரிய விகாரையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது தொடர்பில் ஏற்கனவே பல தடவைகள் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றிலும் இந்த கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் இராணுவ முகாம்களில் அமைந்துள்ள விகாரைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளேன். இதுவரை அந்த விகாரைகளை ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறாக எமது தமிழ் இனத்தை அழித்து, கடந்த கால இனவாத பெரும்பான்மையின இலங்கை அரசு மேற்கொண்ட அடாவடிகளை பன்னாடுகள் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. பன்னாடுகளுக்கு தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பன்னாடுகள் எமது தமிழ் இனத்தின் மீது கரிசனை கொள்ள வேண்டும். எமக்கான நீதியைப் பெற்றுத்தர முன்வரவேண்டும்.
தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு பன்னாட்டு நீதி விசாரணையே வேண்டுமென்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். பன்னாட்டு நீதி விசாரணைப் பொறிமுறையிலேயே எமக்கு நம்பிக்கையுள்ளது. தமிழ் இனவழிப்பு, காணாமல் போனோர் விடயம், வடக்கு, கிழக்கு மனிதப் புதைகுழி விவகாரங்களில் நாங்கள் ஒருபோதும் உள்ளக நீதி விசாரணையினையும், இலங்கை அரசினையும் நம்பத் தயாராக இல்லை.
எனவே தற்போது இந்த நாட்டை ஆட்சி செய்கின்ற இந்த அரசு பன்னாட்டு நீதி விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment