இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஸ்தம்பித்திருக்கும் நிலையில் தண்ணீர் விநியோக இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட காசாவில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் 59 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் மோதலை நிறுத்தும் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்காக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராட்ட அமைப்பின் பிரதிநிதிகள் இடையே கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தைகள் நீடித்து வருகின்றன.
எனினும் கட்டார் தலைநகர் டோஹாவில் இடம்பெற்று வரும் இந்த மறைமுக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஒன்றை எட்டுவதை தடுத்து வருவதாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன. எவ்வாறாயினும் காசா மீதான தீவிர தாக்குதல்களை இஸ்ரேல் தணிவு இன்றி தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஏற்கனவே காசாவில் உள்ள இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தத் தாக்குதல்களினால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இடைவிடாத குண்டு மழையில் காசாவில் 110 பலஸ்தீர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் அமெரிக்க ஆதரவில் முன்னெடுக்கப்படும் உதவி விநியோக இடங்களில் கொல்லப்பட்ட 34 பேரும் அடங்குவதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காசாவில் எரிபொருள் தட்டுப்பாடு ‘அபாய கட்டத்தை’ எட்டி இருப்பதாக ஏழு ஐ.நா. நிறுவனங்கள் கடந்த சனிக்கிழமை எச்சரித்திருந்ததோடு அது உதவி செயற்பாடுகள், மருத்துவ பராமரிப்புகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
நேற்று காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் காசாவில் 59 இற்கும் அதிகமானவர்கள் பலியாகி இருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. காசா நகரில் உள்ள வீடுகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு தண்ணீர் விநியோக இடம் ஒன்றில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் எட்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக பசல் மேலும் குறிப்பிட்டுள்ளர்ர்.
தண்ணீர் டேங்கர் ஒன்றுக்கு அருகே வெற்று கேன்களுடன் தண்ணீர் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியதாக பார்த்தவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளர். இந்தத் தாக்குதலில் மேலும் 16 பேர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மறுபுறம் ‘இரண்டு பாரிய சத்தங்களை கேட்டு விழித்துக்கொண்டாதாக’ நுசைரத்தில் வீடு ஒன்று தரைமட்டமாக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் காலித் ரய்யான் என்பவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘எமது அயலவர் மற்றும் அவர்களது குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மற்றொரு குடியிருப்பாளரான மஹ்மூத் அல் ஷமி போர் நிறுத்தம் ஒன்றை எட்டி போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
‘எமக்கு நடப்பது ஒட்டுமொத்த மனித வரலாற்றிலும் நிகழாத ஒன்று’ என்று கூறிய அவர், ‘இது போதும்’ என்று தெரிவித்தார்.
தெற்கு காசாவில், கடற்கரை ஓரமாக அமைந்துள்ள அல் மாவாசி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரம் ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானம் நடத்திய தாக்குதல் ஒன்றில் மூவர் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு நிறுவன பேச்சாளர் தெரிவித்தார்.
காசாவில் கடந்த 2023 ஒக்டோபர் தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்தை நெருங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் 60 நாள் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியாகவே கட்டாரில் பேச்சுவார்த்தைகள் நீடித்து வருகின்றன. எனினும் உடன்பாடு ஒன்றை எட்டுவது தொடர்பில் ஹமாஸ் பிரதிநிதிகள் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.
நான்கு முக்கிய விடயங்களில் குறைந்தது இரண்டு விடயங்கள் தொடர்பில் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் இழுபறி நீடிப்பதாக பலஸ்தீன பிரதிநிதிகளுடன் தொடர்புபட்ட நெருங்கிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. 60 நாள் போர் நிறுத்தத்தின்போது காசாவில் இருந்து வாபஸ் பெறும் இஸ்ரேலியப் படைகளின் அளவு மற்றும் உதவி விநியோக முறை தொடர்பிலேயே இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை ஒத்திவைப்பதற்கும் போர் நிறுத்த காலத்தில் விடுவிக்கப்படும் பலஸ்தீன கைதிகள் மற்றும் பணயக்கைதிகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு அமெரிக்கா பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த அணுமுறையை ஒரு பொறிவலை என்று பலஸ்தீன பேச்சுவார்த்தையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ‘இது போர் நிறுத்தம் முறிவதற்கு ஹமாஸ் மீது குற்றம்சாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று பலஸ்தீன தரப்பினர் ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
60 நாள் போர் நிறுத்த காலத்தில் காசாவின் பெரும்பகுதிகளில் படைகளை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு இஸ்ரேல் விரும்புவதாகக் கூறப்படுகிறது. எனினும் ஜனவரியில் எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் எல்லைகளுக்கு இஸ்ரேலியப் படை வாபஸ் பெற வேண்டும் ஹமாஸ் வலியுறுத்துகிறது.
அதேபோன்று காசாவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் காசா மனிதாபிமான நிறுவன உதவிகளை போர் நிறுத்த காலத்திலும் தொடர இஸ்ரேல் எதிர்பார்ப்பதோடு உதவி விநியோகங்கள் ஐ.நா மற்றும் பிரதான தொண்டு அமைப்புகளிடம் கையளிக்க ஹமாஸ் வலியுறுத்துகிறது.
சர்ச்சைக்குரிய காசா மனிதாபிமான நிறுவனத்தின் உதவி விநியோக இடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 800க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment