மாவனெல்லை இளைஞர் முஹம்மத் சுஹைல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அநியாயமாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த இளைஞர் தொடர்பிலான வழக்கு விசாரணை கல்கிசை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தெஹிவளை, பெயார் லைன் வீதி அருகே நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றின் அருகே (இஸ்ரேலிய Chabad House இன் அருகே வைத்து) மொஹம்மட் சுஹைல் எனும் இந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும்போது அவரிடம் தேசிய அடையாள அட்டை இருக்கவில்லை என கூறப்படுகின்றது. ஆனால் அப்போது உடனடியாக கைத்தொலைபேசியில் உள்ள தேசிய அடையாள அட்டையின் பிரதி பொலிஸாருக்கு காண்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மறுநாள் அதாவது 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி முற்பகல் சுஹைல், கல்கிஸ்ஸை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அதன்போது அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த இளைஞனை விடுவித்த பின்னர், குறித்த இளைஞனும் அவரது தந்தையும் கொழும்பிலிருந்து மாவனெல்லையில் உள்ள அவர்களின் வீட்டுக்கு செல்ல முன்னரேயே தெஹிவளைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாவனெல்லை பொலிஸாருடன் அந்த வீட்டுக்கு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சுஹைலிடம் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக அவரை கொழும்புக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட சுஹைல் “இஸ்ரேலிய கொடிக்கு கையால் குத்துவது” போன்ற ஒரு ஸ்டிக்கரை கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் கைது செய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு சுஹைல் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருந்த காலத்தில் அவரின் குடும்பத்தினர் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
தினச் சம்பளத்திற்கு தொழில் புரியும் அவரது தந்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தனது மகனை விடுவிப்பதற்காக தனியாகவே முயற்சிகளை மேற்கொண்டுவந்தார்.
தனது வீட்டை அடமானம் வைத்துள்ளதுடன், பல தரப்பினரிடமும் கடன்களை பெற்று பல சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளார். அத்துடன், சுஹைலும் அவருடைய குடும்பத்தினரும் பல வகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தன்னார்வ தொண்டர்களின் உதவி கிட்டும்வரை பெரும் சவால்ளுக்கு முகம்கொடுத்துள்ள சுஹைலின் குடும்பத்தினர் சார்பில் இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் உயர் நீதிமன்றத்திலும் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.
Vidivelli
No comments:
Post a Comment